சத்தீஸ்கரில் சுடுகாடான மின் நிலையம்! பாய்லர் வெடித்து 24 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...! - விசாரணைக்கு உத்தரவு!
Power plant catches fire Chhattisgarh Boiler explodes 24 workers die Investigation ordered
சத்தீஷ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டம் சிங்கிதாரி கிராமத்தில் அமைந்துள்ள வேதாந்தா அனல் மின் நிலையத்தில் பெரும் துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் நடுவே, கடந்த 14-ம் தேதி ஆலைக்குள் உள்ள பாய்லர் திடீரென வெடித்ததால் பெரும் அதிர்ச்சி நிலவியது.

வெடிப்பு ஏற்பட்ட சில நொடிகளில் ஆலை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு, உயிரை காக்க தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் சிக்கி படுகாயமடைந்தனர்.
இந்த துயர சம்பவத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்ததாகவும், 35 முதல் 40 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் அறிந்தவுடன் உள்ளூர் நிர்வாகம் மற்றும் அவசர மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
முதற்கட்ட தொழில்நுட்ப ஆய்வில், பாய்லரில் அளவுக்கு அதிகமாக எரிபொருள் சேமிக்கப்பட்டதால் உள்ளழுத்தம் அதிகரித்து வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல் தடய அறிவியல் ஆய்வக ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த ஓராண்டாகவே இந்த ஆலையில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
Power plant catches fire Chhattisgarh Boiler explodes 24 workers die Investigation ordered