தென்னிந்திய சினிமாவில் ஹீரோக்களுக்கே அதிக முக்கியத்துவம்! நடிகைகள் அதுக்கு மட்டும் தான்! தமன்னா ஓபன் டாக்!
In South Indian cinema heroes get all the importance Actresses are there only for that Tamannaah speaks her mind
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா பாட்டியா, தென்னிந்திய திரைப்படங்களில் பெண்கள் கதாபாத்திரங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் குறித்து பகிர்ந்துள்ள கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளன.
சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய தமன்னா, பாலிவுட்டில் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பல்வேறு வகையான கதைகளைத் தேர்வு செய்யும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார். கலைநயமிக்க கதைகளிலும், வணிக ரீதியான திரைப்படங்களிலும் நடிக்க நடிகர்களும் நடிகைகளும் சுதந்திரமாக முடிவு செய்ய முடிகிறது என்றும், இருவகை படங்களையும் சமநிலையுடன் தேர்வு செய்பவர்களே அங்கு நீண்டகால வெற்றியைப் பெறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், தென்னிந்திய திரைப்படத் துறையில் தனது அனுபவத்தைப் பகிர்ந்த அவர், பெரும்பாலான வணிகத் திரைப்படங்கள் ஹீரோவை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இதனால் பெண் கதாபாத்திரங்களுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றும், பல படங்களில் நடிகைகள் ஹீரோவின் காதலியாக தோன்றுவது அல்லது பாடல்களில் நடனமாடுவது போன்ற வரம்புகளுக்குள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
பெண்களை சித்தரிக்கும் விதத்திலும் மாற்றம் தேவை என்பதை தனது அனுபவத்தின் அடிப்படையில் உணர்ந்ததாக தமன்னா தெரிவித்தார்.
மேலும், வணிகத் திரைப்படங்களில் இடம்பெறும் நடனப் பாடல்கள் குறித்து பேசிய அவர், அவற்றை "ஐட்டம் சாங்ஸ்" என்று அழைப்பதை விட, ரசிகர்களை மகிழ்விக்கும் "பார்ட்டி சாங்ஸ்" என்றே தான் பார்க்கிறேன் என்று கூறினார்.
தமன்னா, ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற "காவாலா" பாடலின் மூலம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த கருத்துகள் தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன.
English Summary
In South Indian cinema heroes get all the importance Actresses are there only for that Tamannaah speaks her mind