4 மாதங்களில் 8 பேரை விஷம் வைத்துக் கொன்ற 'சைக்கோ கில்லர்' சத்தீஸ்கரில் அதிரடி கைது!
Psycho Killer Arrested in Chhattisgarh After Poisoning 8 People Over 4 Months
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் அடுத்தடுத்து 8 பேரை விஷம் வைத்துக் கொன்ற கொடூர "சைக்கோ" கொலையாளியைப் போலீஸார் கைது செய்துள்ளனர். சினிமா பாணியில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி மற்றும் பழிவாங்கும் நோக்கம்
சத்தீஸ்கரின் பலோடா பஜார் மாவட்டத்தில் உள்ள கார்வே கிராமத்தைச் சேர்ந்த மளிகை கடை வியாபாரி ராம் சஹய் ஜெய்ஸ்வால் (46). இவருக்கு ஊர் மக்களுடன் பழைய தேர்தல் தகராறு, கடன் பிரச்சனை, நிலத் தகராறு மற்றும் சூனியம் பற்றிய மூடநம்பிக்கை காரணமாகத் தனிப்பட்ட வெறுப்புகள் இருந்துள்ளன. இதனை மனதில் வைத்துத் தன்னை எதிர்த்தவர்களைப் பழிவாங்க அவர் திட்டமிட்டார். இதற்காக, ஒவ்வொருவரையும் தனித்தனியாகத் தனது வீட்டிற்கு மாலைநேரத்தில் மது அருந்த அழைத்து, மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். கடந்த 4 மாதங்களில் இவரோடு மது அருந்திய 8 பேரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
நாய்களிடம் சோதனை செய்த கொடூரம்
விசாரணையில், எலிகளைக் கொல்லப் போவதாகக் கூறி போராக்ஸ் பவுடரை வாங்கி வந்து அதனை ராம் சஹய் மதுவில் கலந்து கொடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், மனிதர்களுக்குக் கொடுப்பதற்கு முன்னதாக இந்த விஷத்தை நாய்களுக்கு உணவில் கலந்து கொடுத்துச் சோதித்து, அவை இறந்த பிறகே மனிதர்களுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. கொலை செய்த பிறகு தப்பியோடாமல், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டு துக்கம் விசாரிப்பது போல நடித்து எவருக்கும் சந்தேகம் வராமல் தடுத்துள்ளார்.
கொலையாளி சிக்கியது எப்படி?
ஒன்பதாவது நபரான கார்த்திக் குமார் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். தான் நோய்வாய்ப்படுவதற்கு முன்பு ராம் சஹய்யுடன் மது அருந்தியதாக அவர் ஊர்மக்களிடம் தெரிவிக்கவே இந்த சைக்கோ கில்லர் பற்றிய உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து கிராம மக்கள் ஜூன் 6 அன்று அளித்த புகாரின் பேரில், புதைக்கப்பட்ட 7 பேரின் உடல்களைத் தோண்டி எடுத்துப் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர் (ஒருவரது உடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது). தீவிர விசாரணைக்குப் பிறகு ராம் சஹய் ஜெய்ஸ்வால் கைது செய்யப்பட்டு, அவர் மீது 8 கொலை வழக்குகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Psycho Killer Arrested in Chhattisgarh After Poisoning 8 People Over 4 Months