ராகுல் காந்திக்கு 7 நாள் கெடு விதித்த தேர்தல் ஆணையம்!
Congress rahul election commission
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக அங்குள்ள வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இது வாக்குரிமையை பறிக்கும் முயற்சி என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
அதேசமயம், பல மாநிலங்களில் போலி வாக்காளர் விவகாரங்கள் நடந்ததாகவும், குறிப்பாக பெங்களூரு மகாதேவபுராவில் போலி முகவரி, அடையாளம் உள்ளிட்ட முறைகேடுகள் உள்ளனவென ராகுல் காந்தி ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார்.
இதையடுத்து, பிகாரில் வாக்குத் திருட்டுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பெரும் பேரணியை தொடங்கியுள்ளன.
இந்த சூழலில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புது தில்லியில் பேசியபோது, வாக்காளர் பட்டியல் திருத்தம் சட்டப்படி அவசியமானது என்றார். ஜூன் 24 முதல் ஜூலை 20 வரை திருத்தப்பணிகள் நடந்ததாகவும், ஆகஸ்ட் 1 வரை எந்த கட்சியும் ஆட்சேபனை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
செப்டம்பர் 1 வரை திருத்தங்கள் செய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் நினைவூட்டினார். மேலும், வீடுகள் இல்லாதவர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பது போலி வாக்கு அல்ல, அவர்களின் குடியுரிமையின் அடையாளம் என்று கூறினார்.
குடியுரிமையே முக்கியம், முகவரி அல்ல; 18 வயது நிரம்பியிருப்பதே வாக்குரிமைக்கான அடிப்படை என்று வலியுறுத்தினார்.
ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளைப் பற்றிய கேள்விக்கு, 7 நாளுக்குள் எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும், இல்லையெனில் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கருதப்படும் என்றார்.
English Summary
Congress rahul election commission