திக்கு தெரியாத காட்டில் சிக்கிய திருமாவளவன்! கமல்ஹாசன், விஷால் வரிசையில் விஜய்... சொல்கிறார் செல்லூர் ராஜு!
ADMK Sellur raju condemn to DMK Thirumavalavan VCK TVK Vijay
மதுரையில் சமயநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
அமலாக்கத்துறை (ED) சோதனைகள் குறித்து பேசும் போது, “அமைச்சர் வீடுகளில் நடக்கும் சோதனைகளை மறைக்க முதல்வர் எங்களை குறைசொல்லி, அவதூறு பேசுகிறார்.
மனசாட்சி தூய்மையில்லாதவர்கள்தான் சோதனைக்கு பயப்படுவார்கள். அதிமுக அமைச்சர்கள் வீடுகளிலும் முன்பு சோதனை நடந்தது, வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. ஆனாலும் நாங்கள் பயப்படவேயில்லை” என்றார்.
மேலும், 2ஜி அலைக்கற்றை ஊழல் நேரத்தில் காங்கிரஸ் அரசு அமலாக்கத்துறையின் நடவடிக்கையை அஞ்சியதால் திமுக கூட்டணியில் இருந்தது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
திருமாவளவனை குறித்தும் கருத்து தெரிவித்த அவர், “திமுக கூட்டணியில் சேர்ந்ததால், திக்கு தெரியாத காட்டில் சிக்கியவரைப் போல திருமாவளவன் சிக்கிவிட்டார். முன்பு ஜெயலலிதாவை பாராட்டியவர், இப்போது குறை கூறுகிறார். அவருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பதைத் தெரியவில்லை” என்றார்.
அதே நேரத்தில், நடிகர்கள் கட்சி தொடங்குவது அதிமுகவிற்கு பாதிப்பு இல்லை என்றும் கூறினார். “கமல்ஹாசன் கட்சி தொடங்கினார், ஆனால் இப்போது காணாமல் போய்விட்டார். விஷால் கூட கட்சி தொடங்குவதாக அறிவித்தார். எத்தனை நடிகர் கட்சி தொடங்கினாலும் அதிமுகவிற்கு பாதிப்பு ஏற்படாது. நடிகர்கள் கட்சி தொடங்கியது, மக்களின் அரசியல் முடிவோடு சம்பந்தமே இல்லை” என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், மதுரையில் நடைபெறும் தூய்மைப் பணியாளர் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
English Summary
ADMK Sellur raju condemn to DMK Thirumavalavan VCK TVK Vijay