‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது!
Balan the boy
‘ஜான் ஈ மன்’ மூலம் இயக்குநராக அறிமுகமான சிதம்பரம், தனது இரண்டாவது படம் ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ மூலம் தென்னிந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
குறிப்பாக, தமிழில் மட்டும் 60 கோடிக்கும் மேலான வசூலைத் தாண்டி, உலகளவில் 225 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்தது. கதை, திரைக்கதை, நகைச்சுவை என அனைத்திலும் பாராட்டுக்குரிய வெற்றியைப் பெற்ற அந்தப்படம், சிதம்பரத்தின் பெயரை உறுதியாக நிலைநிறுத்தியது.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிதம்பரம் தனது அடுத்த படப்பணியைத் தொடங்கியுள்ளார். ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு அவர் இயக்கும் இந்தப் புதிய திரைப்படத்திற்கு, ‘பாலன் தி பாய்’ என பெயரிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான முதல் லுக் போஸ்டர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சுஷின் ஷியான் இசையமைக்கிறார். மேலும், ஒளிப்பதிவை சிஜு காலித் கவனிக்கிறார்.
சிதம்பரம்-சுஷின் ஷியான் கூட்டணி மீண்டும் வருவதால், இசையிலும் புதுமை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ வெற்றிக்குப் பிறகு சிதம்பரம் எதை தேர்வு செய்கிறார் என்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பாலன் தி பாய்’ படம் எப்போது வெளியாகும், யார் நடிக்கிறார்கள் போன்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் போஸ்டர் வெளியீட்டின் மூலமே இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.