முக்கியமான தேர்தல் வாக்குறுதியை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி!
ADMK Edappadi palanisami manifesto Election 2026
அதிமுக அரசு மீண்டும் அமைந்தால், கோரைப்பாய் நெசவு செய்பவர்களுக்கும் கைத்தறி நெசவாளர்களைப் போல குறிப்பிட்ட அளவு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கான பல நன்மைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதை நினைவுபடுத்தினார். பயிர் கடன் தள்ளுபடி, மும்முனை மின்சாரம், வறட்சி நிவாரணம், பயிர் காப்பீடு, குடிமராமத்து போன்ற திட்டங்கள் மூலம் விவசாயிகள் பெரும் பலன் அடைந்ததாகவும் கூறினார். ஆனால், திமுக ஆட்சியில் விவசாயிகளுக்குப் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
51 மாதங்களாக நடந்து வரும் திமுக ஆட்சி ஊழல் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளால் நிரம்பியுள்ளது என பழனிசாமி விமர்சித்தார். “அமலாக்கத்துறை தொடர்ந்து மந்திரி வீடுகளில் சோதனை நடத்துகிறது. இதுவே ஊழலின் வெளிப்பாடாகும்” என்றார்.
மேலும், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் கொண்டு வருவதாக அவர் உறுதியளித்தார். அதிமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட 7.5% இடஒதுக்கீட்டின் மூலம் 2,800-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவராகியிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து கல்வி மற்றும் சுகாதார துறையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
திமுக அரசு மூடிய அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் தொடங்கப்படுவதாகவும், திருமண உதவித் திட்டமும், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டமும் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று, தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். “மக்களை நம்புகிறோம், மக்கள் தான் நீதிபதிகள்” என்று அவர் வலியுறுத்தினார்.
English Summary
ADMK Edappadi palanisami manifesto Election 2026