டெல்லி கார் வெடிப்பு: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இரங்கல்!
Delhi Red Fort blast PM Modi Rahul Gandhi
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இன்று (நவ. 10) மாலை 6.50 மணியளவில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெடிப்பு காரணமாக அருகிலிருந்த சில வாகனங்கள் தீப்பிடித்தன. இந்தத் துயரச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள காவல் உயர் அதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், "டெல்லியில் இன்று மாலை குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற அதிகாரிகளுடன் நிலைமையை நான் ஆய்வு செய்தேன்." என்று தெரிவித்துள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் செய்தியில், "டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் குண்டுவெடிப்புச் செய்தி மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் அளிக்கிறது. இந்தத் துயர விபத்தில் பல அப்பாவி உயிர்களை இழந்தது மிகுந்த துயரத்தை அளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த துயருற்ற குடும்பத்தினருடன் நான் நிற்கிறேன். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்," என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Delhi Red Fort blast PM Modi Rahul Gandhi