பாஜக கூட்டணியில் விஜய்? ஓபிஎஸ் கூட்டணியில் உள்ளாரா? பாஜக நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி!
BJP TVK OPS Alliance
மதுரை மருத்துவக் கல்லூரி விடுதியில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், "மூவர்ணக் கொடியை மரியாதையுடன் நாட்டின் ஒற்றுமைக்கும், பிரதமர் மோடிக்கு பாராட்டாகவும் தமிழகமெங்கும் யாத்திரை நடைபெற்று வருகிறது. இது ராணுவ வீரர்களுக்கான நாம் செலுத்தும் நன்றியின் வெளிப்பாடு" என்றார்.
டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனைகள் நடப்பது குறித்து கூறும்போது, அது சுயாதீனமாக செயல்படும் அமைப்பாகும். பா.ஜ.க.வுடன் அதற்கெல்லாம் சம்பந்தமில்லை. புகார் இல்லாமல் சோதனை நடக்காது என்பதுதான் உண்மை. அமைச்சர்களின் வீடுகளில் சோதனை பற்றி எனக்கு முழு தகவல் இல்லை,” என்றார்.
த.வெ.க. தலைவர் விஜய் கூட்டணியில் சேர விருப்பமில்லையென்று அக்கட்சி நிர்வாகி தெரிவித்தது குறித்து தெரிவிக்கையில், “அது அவருடைய தனிப்பட்ட முடிவு. ஆனால் தி.மு.க. ஆட்சியை மாற்ற வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக வருவது அவசியம். தேர்தலுக்கு இன்னும் நேரம் உள்ளது. யார் கூட்டணியில் இருப்பார்கள் என்பது அப்போது தெரியும்,” என நயினார் கூறினார்.
“2026-ல் தி.மு.க. ஆட்சி அமைக்கும் என முதல்வர் கூறியிருப்பது அவரின் உரிமை. ஆனால் முடிவெடுப்பது மக்கள்தான். ராணுவ வீரர்களை விமர்சிக்கக் கூடாது. ஓ.பி.எஸ். பா.ஜ.க. கூட்டணியில் உள்ளார். அதில் குழப்பமில்லை. அமித்ஷாவை அவர் நேரில் சந்திக்காமலிருப்பது சாதாரணம் விஷயம் தான்” என்றார்.