தமிழக அரசு இனியும் நத்தை வேகத்தில் நகர்வது நல்லதல்ல - எச்சரிக்கும் பாஜக நாராயணன்!
BJP Narayanan Thirupathy Advice to TNGovt DMK
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த 14ம் தேதி, உத்தரபிரதேச மாநிலம், கவுதம புத்தா மாவட்டம், ஜேவாரில் HCL - Foxcon நிறுவனங்கள் 3706 கோடி முதலீட்டில் துவக்கும் குறைகடத்தி (Semiconductor) தொழிற்சாலைக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
அலைபேசிகள், மடிக்கணினிகள், வாகனங்கள், ஆகியவற்றுக்கான திண்மப்பொருள் தட்டுகளை (Wafers) உருவாக்கும் தொழிற்சாலையாக இது அமையவிருக்கிறது.
மாதந்தோறும் 3 கோடியே, 60 இலட்சம் குறைக்கடத்தி சில்லுகளை (Chips) உற்பத்தி செய்து, 20,000 திண்மப்பொருள் தட்டுகளை மாதந்தோறும் தயாரிக்கும் திறன் பெற்றதாக அமையவிருக்கிற இந்த தொழிற்சாலை 2027 ல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் தொடங்கப்பட இருப்பதாக கடந்த இரண்டு வருடங்களாக சொல்லப்பட்ட நிலையில்,உத்தர்பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட இருப்பது வியப்பளிக்கிறது. தமிழக அரசு மிகப்பெரிய வாய்ப்பை நழுவ விட்டிருப்பது வருந்தததக்கது. உற்பத்தி மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்று பெயர் தமிழகம் இந்த விவகாரத்தில் தவறிழைத்ததா?
அல்லது உத்தரபிரதேச அரசு தமிழகத்தை விட அதிக சலுகைகளை வழங்கியுள்ளதா?நம்மை விட மிகவும் பின்தங்கியுள்ள உத்தரபிரதேச மாநிலம் பல்வேறு கட்டமைப்புகளை பெருக்கி வருவது குறிப்பிடத்தக்கது. பெரிய மாநிலம், அதிக மனித ஆற்றல், தொழில் தொடங்க பல்வேறு சலுகைகள் ஆகியவை தான் இதற்க்கு முக்கிய காரணம்.
நொய்டாவின் ஜேவாரில் அமையவிருக்கும் விமான நிலையம் இந்த தொழிற்சாலை அமையவிருப்பதற்கான முக்கிய காரணம். ஆனால், பல்வேறு காரணங்களால் சென்னை விமான நிலைய விரிவாக்கம் தடைபட்டு வருவதும், திராவிட மாடல் திமுக அரசின் கொள்கை முடக்குவாதமும், தொழில் துறையின் அலட்சியமும் தான் மிக முக்கிய காரணங்கள்.
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கட்டமைப்பு பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், தமிழக அரசு இனியும் நத்தை வேகத்தில் நகர்வது நல்லதல்ல. மேலும், கட்டமைப்புகளில் அதிக முதலீடுகளை செய்ய தவறி வருகிறது திராவிட மாடல் திமுக அரசு. சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி ஆகியவற்றில் முதன்மையாக உள்ளதாக நாம் பெருமை கொண்டிருந்த காலம் மாறிப்போய் இன்று குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற மாநிலங்கள் பெரும் உற்பத்தியை செய்து வருகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.
பல்வேறு துறைகளில் பல மாநிலங்கள் போட்டி போட்டு கொண்டு தமிழகத்தை பின்னுக்கு தள்ளி வருகின்றன அல்லது அவை முன்னேறுகின்றன என்பதை தமிழக அரசும், முதல்வரும் உணரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பழம் பெருமை பேசி பயன் இல்லை என்பதை உணருமா தமிழக அரசு? காலம் பதில் சொல்லும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy Advice to TNGovt DMK