CM ஸ்டாலினுக்கு கூச்சமாக இல்லையா? உங்கள் தந்தையார் உங்களுக்காகவே ஒன்றை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்... அண்ணாமலை பரபரப்பு அறிக்கை!
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin election 2026
பாஜக அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், சட்டம் ஒழுங்கு சீர்குலைவும், போதைப் பொருள் புழக்கமும், கள்ளச்சாராயமும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறைகளும் பல மடங்கு அதிகரித்துள்ள இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை எப்போது வீட்டுக்கு அனுப்பலாம் என்று, தமிழக மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கையில், version 2.0 என்று பொதுமக்களைப் பயமுறுத்தியிருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 37 லட்சம் தாய்மார்களுக்கு மாதம் ரூ.830 வழங்கப்படுகிறது. பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 1 கோடியே 29 லட்சம் தாய்மார்களுக்கு மாதம் 1250 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆட்சிக்கு வந்து 29 மாதங்களுக்குப் பிறகு, பாஜக பலமுறை வலியுறுத்திய பிறகே, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்துதான் தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
அதுவும், தகுதியுடைய என்று கூறி, பல லட்சம் தாய்மார்களுக்கு இன்னும் உதவித்தொகை வழங்கப்படவில்லை. ஆனால், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களோ, திமுக அரசுதான் முதன்முதலில் வழங்கியதாகக் கதைகளை அவிழ்த்து விடுகிறார். என்ன இருந்தாலும், ஒரு கதாசிரியரின் மகனல்லவா.
தமிழகத்தில், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நிலவுகிறது. கனிமவளக் கொள்ளையைத் தடுத்த அரசு அதிகாரிகளை, அவர்கள் அலுவலகத்தில் புகுந்தே தாக்கி, கொலையும் செய்த செய்திகள் இதே திமுக ஆட்சியில்தான் நிகழ்ந்தன.
நாள்தோறும் நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பாலியல் குற்றங்களை எல்லாம், அங்கொன்றும், இங்கொன்றுமான தனிநபர் பழிக்குப் பழி வாங்கும் சம்பவங்கள் என்று எளிதாகக் கடந்து செல்ல, முதலமைச்சருக்குக் கூச்சமாக இல்லையா?
நாகரிகமாக நடந்து கொள்கிறார்களாம். நாகரிகத்தின் எல்லையைக் கடந்தால் நடவடிக்கை எடுப்பார்களாம். இப்படி எல்லாம் பேச உங்களுக்கே சிரிப்பு வரவில்லை முதலமைச்சரே? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ஜாதியின் பெயரைச் சொல்லி பொது மேடையில் அவமானப்படுத்தியபோதும், இலவசப் பேருந்தில் பயணம் செய்யும் தாய்மார்களை ஓசி என்று அவமானப்படுத்தியபோதும், கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டு இருந்து விட்டு, தற்போது விரைவில் தேர்தல் வரவிருப்பதால், நடவடிக்கை என்ற பெயரில் நீங்கள் நாடகமாடுவது தெரியாதா?
ஒட்டு மொத்த அமைச்சரவையிலும், ஊழல் குற்றச்சாட்டு இல்லாத அமைச்சர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இப்படி இருக்கையில், உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டிப்புக்குப் பிறகு, வேறு வழியின்றி சாராய அமைச்சரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறீர்கள். பதிலுக்கு, ஆவின் பால் கொழுப்பில் கூட ஊழல் செய்யலாம் என்று கண்டுபிடித்தவருக்கு, மீண்டும் பதவி கொடுத்து அழகு பார்க்கிறீர்கள். இதுதான் உங்கள் முன்னோடிகள், உங்களுக்குக் கற்றுத் தந்த பண்பா?
உங்கள் தந்தையார் கலைஞர் கருணாநிதி, உங்களுக்காகவே ஒன்றை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார்.
“ஓர் அமைச்சரவையில், தவறு செய்த அமைச்சர்களே இத்தனை பேர் என்றால், அந்தக் கட்சியின் செயல்பாடு எத்தகையது? அந்தக் கட்சியை ஆட்சிக்கு வரவிடலாமா?”
தவறைத் தவிர வேறொன்றும் செய்யாத ஒட்டு மொத்த அமைச்சரவையின் முதல்வராக இருக்கும் உங்களுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக மக்கள் வழங்கப் போவது, படுதோல்வி மட்டுமே" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Annamalai Condemn to DMK Govt MK Stalin election 2026