திமுக கூட்டணி கட்சிகள் என்.எல்.சிக்கு எதிராக போராடாதது ஏன்? - அருண்மொழித்தேவன், அதிமுக எம்எல்ஏ.!!
AIADMK MLA ask DMK alliance parties why not protest against NLC
என்எல்சி நிறுவனம் கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் இரண்டாம் கட்ட நிலக்கரி சுரங்க பணிக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாய நிலம் மத்தியில் பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து புவனகிரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் தனது அலுவலகத்தில் விவசாயிகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் "என்எல்சி நிறுவனம் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தின் படி எந்தவித கோரிக்கையும் நிறைவேற்றாமல அராஜகப் போக்குடன் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை அழித்து நில கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. விவசாயிகளை அழித்து பேசி சுகமான முடிவு எட்டப்படாத நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களை அழித்து வாய்க்கால் வெட்டுகின்ற பணியை என்எல்சி நிறுவனம் செய்து வருகிறது.
இன்று தமிழகமே கொந்தளிக்கும் நிலையில் பல்வேறு தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் இதற்காக குரல் கொடுக்கின்றனர். ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கு எதிராக என்எல்சி நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பயிர்கள் அறுவடை செய்யும் வரை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாதா? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் பயிர்கள் அழிப்பதை பார்க்கும்போது தனக்கு கண்ணீர் வருவதாக நீதியரசரே கூறியுள்ளார். ஆனாலும் வாய்க்கால் வெட்டும் பணியை நாங்கள் நிறுத்த மாட்டோம் என ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்து போர்க்களம் போல அந்த பகுதியை மாற்றி அங்கு இருக்கும் விவசாயிகள் மற்றும் தாய்மார்களின் கண்ணீரை கூட பொருட்படுத்தாமல் கால்வாய் வெட்டும் பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசு தனது அதிகார பலத்தால் விவசாயத்தை அழிக்க நினைக்கிறது. இதை கண்டித்து போராடக்கூடாது, விவசாயிகளை சந்திக்கக் கூடாது என தடுக்கின்றனர். விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன் நேற்று காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளார். இந்த ஆட்சியில் அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது திமுகவைச் சேர்ந்த விவசாயிகளே என்எல்சி நிறுவனத்தால் வஞ்சிக்கப்படுகிறோம் என கேள்வி எழுப்பினர். அப்போது ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். திமுக தேர்தல் வாக்குறுதி 43ல் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றப்படுவதை தடுத்திட நடவடிக்கை மேற்கொண்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.

இந்த வாக்குறுதி என்ன ஆச்சு? திமுக ஆட்சிக்கு வருவதற்காக ஒன்று சொல்வார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் அதையெல்லாம் மறந்து விடுவார்கள். தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? அல்லது சர்வாதிகார ஆட்சியா? இதே முதல்வர் கடந்த ஆண்டு தமிழகத்தில் மின் உற்பத்தி உயர்ந்து கொண்டே இருக்கிறது. தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம் என கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதமே 34,860 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இவ்வாறு இருக்க வெறும் 800 மெகாவாட் மின்சாரம் மட்டும் தான் என்எல்சி மூலம் கிடைக்கிறது. யாருடைய நிர்பந்தத்திற்காக என்எல்சி நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. என்எல்சி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக நிலம் எடுப்பே நடைபெறவில்லை என விளம்பரம் செய்துள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை அனைத்தும் நிறைவேற்றினால் மட்டுமே நிலம் கையகப்படுத்தப்படும் என அதிமுக ஆட்சியில் நிர்பந்திக்கப்பட்டதால் நிலம் கையகப்படுத்தப்படவில்லை.
ஒரு ஏக்கர் நிலமும் ஒரு வீடும் கொடுத்தால் ரூ.72 லட்சம் கொடுப்பதாக என்எல்சி நிர்வாகம் பொய் பிரச்சாரம் செய்கிறது. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு சட்டத்தின்படி தற்போதைய நிலையிலேயே தொடர்வதற்கு தான் இந்த சட்டம். என்எல்சி நிறுவனத்தால் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் எந்த பிரயோஜனமும் இல்லை. சமீபத்தில் நடந்த பட்டதாரி பொறியியலாளர் தேர்வில் ஒரு தமிழர் கூட இடம் பெறவில்லை. உயர் அதிகாரிகளில் ஒருவர் கூட தமிழர் இல்லை. தமிழர் இருந்தால்தானே தமிழக விவசாயிகள் குறித்து கவலைப்படுவார்கள்.

சிஎஸ்ஆர் பணத்தில் 84 கோடி செலவு செய்ததாக கணக்கு காட்டிவிட்டு வெறும் 94 லட்சம் ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளனர். சுயநலத்திற்காக இதுபோன்ற செயல்படும் தமிழக அரசு உடனடியாக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும். சில தற்குறிகள் பணம் வாங்கி விட்டார்கள் போக வேண்டியது தானே என பேசுகிறார்கள். விவசாயிகளின் கஷ்டம் ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு பேட்டி தருபவனுக்கும், பெட்டி வாங்கும் அரசியல் தலைவனுக்கும் இது தெரியாது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு கோவையில் கண்டன பொதுக்கூட்டம் போட்ட திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று வாயில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்று என்எல்சி நிறுவனம் இருக்க வேண்டும், நிலம் எடுக்க வேண்டும் ஆனால் விவசாயம் செய்யக்கூடாது என பேசுகிறார்கள்.
செந்தில் பாலாஜிக்காக இந்த மாவட்டத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் அழகிரி, இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் பேசியவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு காவல்துறையை வைத்து விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. உங்களின் அடக்குமுறை ஒரு நாளும் வெற்றி பெறாது என்பதை உணர்ந்து அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆட்டம் போடாமல் மக்களின் கேட்டு தீர்த்து வைக்க முயற்சி செய்ய வேண்டும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
AIADMK MLA ask DMK alliance parties why not protest against NLC