இந்தியா தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலியானதாக டிஜிஎம்ஓ ராஜிவ் கய் உறுதி..!
DGMO Rajiv Ghai confirms that key terrorists were killed in India attack
'பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் தான் இந்திய ராணுவம் முதலில் தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராணுவ டி.ஜி.எம்.ஓ., ராஜிவ் கய் கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படை டி.ஜி.எம்.ஓ.,க்கள் இன்று 11-ஆம் தேதி பேட்டி அளித்தனர். அப்போது, ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டிஜிஎம்ஓ) ராஜிவ் கய் கூறியதாவது:

பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்கவும், பயங்கரவாத முகாம்களை அழிக்கவும் தெளிவான ராணுவ குறிக்கோளுடன் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. ஒரு தேசமாக நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது என்றும், 09 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும், முக்கியமாக பயங்கரவாதிகளை தாக்குவதை மட்டுமே இலக்கு என்று உறுதியாக கொண்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏராளமான பயங்கரவாத முகாம்கள் இருந்தாலும், நாம் தாக்குவோம் என்ற அச்சத்தில் பல பயங்கரவாத முகாம்கள் முன்னரே காலி செய்யப்பட்டு விட்டன என தெரியவந்தது. 09 பயங்கரவாத முகாம்கள் உளவுத்துறை தகவல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதில் சில பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்தது. சில பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்தது என்று ராஜிவ் கய் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் பயங்கரவாத அமைப்பு முகாம் அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் ஹெட்லி போன்ற பயங்கரவாதிகளை உருவாக்கியது என்றும், இந்த முகாமில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் யூசுப் அசார், அப்துல் மாலிக் ராப் மற்றும் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலுக்கு காரணமான முதாசிர் அஹமது உள்ளிட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அவர் அறிவித்துள்ளார்.
ஆனால், பதிலுக்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியாவில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அப்பாவி மக்கள் உயிரிழந்ததோடு, குருத்வாரா உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மற்றும் கிராமங்கள் சேதமடைந்ததுள்ளன என்று கவலை தெரிவித்துள்ளார்.

அதன்பிறகே இந்திய ராணுவம், பாகிஸ்தானிய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியதாகவும், இதில், 35 முதல் 40 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதில் விமானப்படை முக்கிய பங்கு வகித்தது என்றும், இந்திய கடற்படை முக்கிய வெடி மருந்துகளை வழங்கியதாகவும், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவான செய்தியை அனுப்பி உள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
English Summary
DGMO Rajiv Ghai confirms that key terrorists were killed in India attack