வருகின்ற 23 ஆம் தேதி., வாழ்த்து தெரிவித்து, அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு, திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அதிமுக சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "சூரிய குல சத்திரியர் வம்சமாக போற்றப்படுபவரும், சங்ககாலத்தில் உதித்த சரித்திர நாயகரும், முத்தரையர் இனத்தின் குலதெய்வக் கடவுள்களில் ஒருவராக போற்றப்படுபவரும், முதுதமிழுக்கு மெய்கீர்த்தி கண்டவருமான பெரும்பாட்டன் பேரரசர் சுவரன்மாறன் முத்தரையர் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார்.

திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய தமிழகத்தின் நிலப் பரப்பை வரலாறு போற்றும் வகையில் கி.பி. 705 முதல் கி.பி. 745 வரை ஆட்சி செய்தவரும், வரலாற்றில் முதன்மையானவருமான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதய விழா 23.05.2023 அன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும்.

தன் வாழ்நாளில் 16 பெரும் போர்களில் தோல்வியே காணாத மாபெரும் அதிதீரன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் மட்டுமே. 14 போர்களை தன்னிச்சையாக வென்றவர். இரண்டு போர்களில் பல்லவர்களுக்கு துணையாக நின்று வெற்றி கண்ட நமது சிம்ம நாயகன் பேரரசர் முத்தரையர் அவர்கள் நிகரில்லா மாவீரனாக வாழ்ந்தார் என்றும், வரலாற்றில் தன் வாழ்நாளில் வாகை பூவை மட்டுமே சூடிய ஒரே பேரரசர் நம் முப்பாட்டன்-சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் மட்டுமே என்றும் வரலாற்றில் நாம் படிக்கின்றோம்.

தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, அவை காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பேரரசர் பெரும்பிடு முத்தரையர் அவர்கள் ஆற்றிய பணிகளை வரலாறு பதிவு செய்கிறது.

இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 1996-ஆம் ஆண்டு தனது முதலாவது ஆட்சிக் காலத்தில், திருச்சி மாநகரின் மையப் பகுதியில் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருஉருவச் சிலையை நிறுவினார்கள். இவரது பிறந்த நாளை 2002-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடவும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ஆணையிட்டார்கள்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் சதய விழாவை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்களின் சார்பில், 23.05.2023 - செவ்வாய்க் கிழமை காலை 10.30 மணியளவில், திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்களும், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Edappadi Palanisami Wish and Invite muthraiyar day


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->