ENGvIND: லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணியின் சாதனைகள் என்ன? மைதானம் யாருக்கு சாதகம்?!
test cricket ENGvIND
இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி இருப்பதால், சமன் செய்யும் நோக்குடன் வீரர்கள் களமிறங்க தயாராகி வருகின்றனர்.
இந்த தொடரின் முதல் நான்கு டெஸ்டுகளிலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர்; இதுவரை 18 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஓவலில் நடக்கவுள்ள இறுதி டெஸ்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுக்கும் சமநிலை வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கடந்த 11 டெஸ்டுகளிலும் (2014 முதல்) முடிவுகள் கிடைத்துள்ளன.
இந்திய அணி ஓவலில் 1936 முதல் 15 டெஸ்டுகள் ஆடியுள்ளது. இதில் 2 வெற்றி, 6 தோல்வி, 7 டிரா. 1971-ல் அஜீத் வடேகர் தலைமையில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுக்கு வீழ்த்தியதன் மூலம் இங்கு இந்தியா தனது முதல் டெஸ்ட் வெற்றியை பெற்றது. 2021-ல் விராட் கோலி தலைமையில் 157 ரன்கள் வித்தியாசத்தில் இன்னொரு வெற்றி பெற்றது. 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இங்கு ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 664 (2007), குறைந்தபட்சம் 94 (2014). சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் இங்கு இரட்டை சதம் அடித்துள்ளனர்.
இங்கிலாந்து 106 டெஸ்டுகளில் 45 வெற்றி, 24 தோல்வி, 37 டிரா என சாதனை படைத்துள்ளது. 1938-ல் 903 ரன் (ஆஸ்திரேலியா எதிராக) அதன் சிறந்த ஸ்கோர். 1896-ல் ஆஸ்திரேலியா 44 ரன்னில் சுருண்டது இங்கு பதிவான மோசமான ஸ்கோர்.
லியோனர்ட் ஹட்டன், ஹாஷிம் அம்லா ஆகியோர் முச்சதம் விளாசியுள்ளனர். விக்கெட்டுகளில் இயான் போத்தம் (52), ஜேம்ஸ் ஆண்டர்சன் (50) முன்னிலை வகிக்கின்றனர்.