அரியானா மாநிலங்களவை தேர்தல்; பாஜகவின் பேரத்திற்கு பயந்து இமாச்சல் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ள 32 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்..!
With the Rajya Sabha elections in Haryana fast approaching Congress MLAs have been accommodated in a resort
கடந்த 2022-ஆம் ஆண்டில் அரியானாவில் நடந்த மாநிலங்களவை தேர்தலின் போது, போதுமான பலம் இருந்தும் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய முடியாமல் போனது. அப்போது நடந்த வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் கட்சிக்குள்ளேயே நடந்த சில மாற்றங்களால் வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது.
இந்த சூழலில் நாளை மறுநாள் (16 -ஆம் தேதி) அரியானாவில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அரியானாவின் 30 முதல் 32 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாதுகாப்பிற்காக இமாச்சல பிரதேசத்தில் உள்ள குப்ரி மலைப்பிரதேச ரிசார்ட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று சண்டிகரில் உள்ள பூபிந்தர் சிங் ஹூடா இல்லத்தில் நடந்த காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு, குறித்த எம்எல்ஏக்கள் அனைவரும் இரண்டு சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்படி, இவர்கள் அனைவரும் குப்ரியில் உள்ள அட்வென்ச்சர் ரிசார்ட்டில் 32 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அரியானாவில் உள்ள இரண்டு மாநிலங்களவை இடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இதில், பாஜக சார்பில் சஞ்சய் பாட்டியாவும், காங்கிரஸ் சார்பில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கரம்பீர் சிங் பவுத்தும் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, சதீஷ் நந்தல் சுயேச்சையாக (பாஜக ஆதரவாளர்) களமிறங்கியுள்ளதால் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. 90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபையில், ஒரு வேட்பாளர் வெற்றி பெற 31 வாக்குகள் தேவை.
ஆனால், காங்கிரசிடம் தற்போது 37 எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும், மற்ற கட்சிகள் பேரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க இந்த'ரிசார்ட் அரசியல்' அதாவது ரிசார்ட்டில் தங்க வைக்கும் நீண்டகால திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரிசார்ட் யணத்தில் பூபிந்தர் சிங் ஹூடா, வினேஷ் போகட் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதுகுறித்து பூபிந்தர் சிங் ஹூடா கூறுகையில், 'எம்எல்ஏக்கள் அனைவரும் தாமாக முன்வந்துதான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். தேர்தல் நடைபெறும் நாளன்று அவர்கள் அனைவரும் சண்டிகர் திரும்பி தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள்' என்று தெரிவித்துள்ளார்..
English Summary
With the Rajya Sabha elections in Haryana fast approaching Congress MLAs have been accommodated in a resort