ஹாலிவுட்டையே மிரட்டும் பிரம்மாண்டம்...! 'வாரணாசி' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட அதிரடி அப்டேட்...!
grandeur that threatens Hollywood Rajamouli exciting update film Varanasi
2027-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள 'வாரணாசி' திரைப்படம், இந்திய திரையுலகின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.சுமார் ரூ.1,400 கோடி பொருட்செலவில் தயாராகி வரும் 'வாரணாசி', இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக முதலீட்டில் உருவாகும் திரைப்படம் எனப் பேசப்படுகிறது.
அறிவியல் புனைகதை, ஆன்மிகம் மற்றும் சாகசம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் இந்த திரைப்படம், திரேதா யுகம் முதல் கலியுகம் வரை விரியும் மாபெரும் காலப்பயணக் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.பூமியை நோக்கி வேகமாக நெருங்கும் விண்கல் ஏற்படுத்தும் பேராபத்தையும், வாரணாசி நகரின் படித்துறைகளில் புதைந்து கிடக்கும் மர்மங்களையும் இணைத்து கதை பின்னப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

படப்பிடிப்பு ஐதராபாத், ஒடிசா, கென்யாவின் ஆப்பிரிக்க வனப்பகுதிகள் மற்றும் அண்டார்டிகாவின் பனிப்பிரதேசங்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள், பகுதிகளில் நடைபெற்றுள்ளது.இந்த திரைப்படத்தில் தெலுங்கு நட்சத்திரம் மகேஷ் பாபு, 'ருத்ரா' மற்றும் 'ஸ்ரீராமர்' என்ற இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்.
மலையாள நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன், 'கும்பா' என்ற சக்திவாய்ந்த எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா, 'மந்தாகினி' கதாபாத்திரத்தின் மூலம் முக்கியமான இடத்தைப் பெறுகிறார்.புகழ்பெற்ற கதையாசிரியர் விஜயேந்திர பிரசாத் கதை அமைத்துள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்து வருகிறார்.
உலகளாவிய அளவில் 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.அண்மையில் பேசிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, 'வாரணாசி' திரைப்படத்தின் சுமார் 80 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
முக்கியமான சண்டைக் காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது எஞ்சிய காட்சிகளின் படப்பிடிப்பு, பின்னணித் தயாரிப்பு பணிகள் மற்றும் கணினி காட்சியமைப்பு பணிகள் ஒரே நேரத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், 'வாரணாசி' திரைப்படம் குறித்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது.
English Summary
grandeur that threatens Hollywood Rajamouli exciting update film Varanasi