இடதுசாரிகள் ஆதரவின்றி விஜய் ஆட்சி அமைந்திருக்க முடியாது - கே. பாலகிருஷ்ணன் அதிரடி!
CPM Leader K Balakrishnan Demands Removal of CEC Claims TVK Govt Survived on Left Support
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது தங்களுக்குச் சிறிதும் நம்பிக்கை இல்லை எனக் குறிப்பிட்டதுடன், தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவி நீக்கம் செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து, போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை மற்றும் விலைவாசி உயர்வு போன்றவை அதிகரித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் தவெக அரசு அமைந்தது குறித்துப் பேசிய அவர், "சட்டமன்றத்தில் வெறும் 4 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இல்லை என்றால் விஜய்யால் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. விஜய் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், எங்கள் ஆதரவு இல்லையென்றால் ஆட்சி அமைந்திருக்க முடியாது" எனச் சுட்டிக்காட்டினார். மேலும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் 'விஜய் அலை' வீசுவதாகக் கூறப்படுவதன் உண்மைத்தன்மையை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும் என்றும், 5 மாத ஆட்சியை வைத்து எதையும் முழுமையாக மதிப்பிட முடியாது என்றாலும், தற்போதைய போக்கைப் பார்க்கும்போது எஞ்சிய கால நினைப்பு பயத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தைத் தனியாருக்கு வழங்குவது தொடர்பாகத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதை விமர்சித்த பாலகிருஷ்ணன், "இன்றைக்கு விமான நிலையத்தைத் தனியாருக்குக் கேட்கும் முதலமைச்சர், நாளைக்கே தமிழ்நாட்டையே அம்பானிக்குக் குத்தகைக்கு விடவும் தயங்கமாட்டார்" எனக் கடுமையாகச் சாடினார். தமிழக அரசு தவறுகள் செய்யும்போது அதனை எதிர்த்து உறுதியாகப் போராடுவோம் என்றும், தற்போது தங்களது கட்சி எந்தக் கூட்டணியிலும் இல்லை என்றும், பொதுத்தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
English Summary
CPM Leader K Balakrishnan Demands Removal of CEC Claims TVK Govt Survived on Left Support