"நான் உயிரோடு இருக்கும் வரை நாம் 4 பேரும் மீண்டும் ஒன்றாக இருக்க மாட்டோம்"! உறுதியாக சொன்ன ரவி மோகன்!
As long as I am alive the four of us will not be together again Ravi Mohan stated firmly
நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள நண்பர்கள் தின பதிவு, அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவாதங்களை மீண்டும் சமூக வலைதளங்களில் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட திருமண பிரச்சினை மற்றும் விவாகரத்து வழக்கு காரணமாக ரவி மோகன் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இதற்கிடையில், பாடகி கெனிஷாவுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் ஒன்றாக தோன்றியதையடுத்து, இருவரையும் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவின.
அதன் பின்னர், கெனிஷா தன்னைப் பற்றிய அவதூறுகள் அதிகரித்ததாகக் கூறி, ரவி மோகனிடம் இருந்து விலகுவதாக இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பதிவிட்டார். தொடர்ந்து பேட்டியளித்த ரவி மோகன், தனது விவாகரத்து விவகாரம் முடியும் வரை புதிய படங்களில் நடிக்க மனநிலை இல்லை என்றும், அந்த சூழ்நிலை தன்னை பெரிதும் பாதித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
அதில், "என்னுடைய அன்பான மக்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள். உண்மையான நண்பர்களாக என் பக்கத்தில் நின்று ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. சிலர் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்புக்கு இணையான செயல்களில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமானது. என்னைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும் வரை நாம் நான்கு பேரும் மீண்டும் ஒரே அறையில் ஒன்றாகச் சேரவே மாட்டோம். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். உங்கள் நண்பர்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரவி மோகனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை கிளப்பியுள்ளது. குறிப்பாக, அண்மையில் ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார், "ஆர்த்தி இன்னும் ரவி மோகனுடன் சேர்ந்து வாழவே விரும்புகிறார்" என்று கூறியிருந்த நிலையில், ரவி மோகனின் இந்த பதிவு இருவரும் மீண்டும் இணையும் வாய்ப்பு இல்லை என்ற தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.எனினும், ரவி மோகன் தனது பதிவில் யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
As long as I am alive the four of us will not be together again Ravi Mohan stated firmly