விஜய் நிபந்தனையால் தந்தை - மகன் இடையே கருத்து வேறுபாடு! தவெகவில் இணைய துடிக்கும் ரவீந்திரநாத்!குழப்பத்தில் ஓபிஎஸ்!
Difference of opinion between father and son due to Vijay condition Ravindranath eager to join TVK OPS in a state of confusion
சென்னை: தமிழக அரசியலில் கட்சி தாவல்கள் தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) குடும்பத்தைச் சுற்றி புதிய அரசியல் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, முன்னாள் எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் பரவி வருகின்றன.
அரசியல் வட்டாரங்களின் தகவலின்படி, ரவீந்திரநாத் தனது ஆதரவாளர்கள் மூலம் தவெக தலைமைக்கு தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த முயற்சிக்கு பெரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து தொடர்பு கொண்ட பிறகே தவெக தரப்பில் பதில் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
அந்த பதிலில், ரவீந்திரநாத் மட்டும் கட்சியில் இணைவதை விட, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இணைந்தால் மட்டுமே அவரது இணைப்பு குறித்து பரிசீலிக்க முடியும் என்ற நிபந்தனை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலே தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதனால், தனது அரசியல் எதிர்காலத்தை ஆளுங்கட்சியுடன் இணைந்து முன்னெடுக்க விரும்பும் ரவீந்திரநாத், ஓபிஎஸ்ஸையும் தவெகவில் இணைய சம்மதிக்க வைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், ஓபிஎஸ் தரப்பின் அரசியல் கணக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது திமுக கூட்டணியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டு வரும் அவர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து புதிய கட்சியில் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. தற்போது கையில் உள்ள அரசியல் வாய்ப்பை இழக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, ரவீந்திரநாத் உடனடியாக தவெகவில் இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும், ஓபிஎஸ் அவசர முடிவு எடுக்கக் கூடாது என்ற அணுகுமுறையிலும் இருப்பதால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தேனி மாவட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதற்கிடையில், ஓபிஎஸ் குடும்பத்தின் அடுத்த அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்பதும், தவெக தரப்பு இந்த விவகாரத்தில் இறுதியாக என்ன முடிவு எடுக்கும் என்பதும் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Difference of opinion between father and son due to Vijay condition Ravindranath eager to join TVK OPS in a state of confusion