கோவை அண்ணா பல்கலை. இணை பேராசிரியர் இடைநீக்கம் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை..!
Madras High Court grants interim stay on the suspension order of a Coimbatore Anna University Associate Professor
கோவை அண்ணா பல்கலைக்கழக இணை பேராசிரியராக பணியாற்றி வரும் டாக்டர் ஜெ. வெங்கடேஷ் சஸ்பெண்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக டீனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த கோவை அண்ணா பல்கலைக்கழக இணை பேராசிரியர் டாக்டர் ஜெ. வெங்கடேஷ், சமர்ப்பித்த பணி அனுபவச் சான்றிதழ்கள் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட குற்றக் குறிப்பாணையையும் (மெமோ), இடைநீக்கத்தையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு மீதான விசாரணை நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மனுதாரரின் பணி அனுபவச் சான்றிதழ்கள் 2008 ஆம் ஆண்டிலேயே பல்கலைக்கழகத்தால் சரிபார்க்கப்பட்ட பின்னரே நியமன ஆணை வழங்கப்பட்டதாகவும், அதன் பின்னரும் பல்வேறு கட்டங்களில், அவரது பணிப்பதிவுகள் சரிபார்க்கப்பட்டது என்ற வாதிட்டார்.
அத்துடன், பல்கலைக்கழகத்தின் முறைகேடுகள் தொடர்பாக பல்கலைக்கழக டீன் டாக்டர் எம். சரவணகுமாருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது சில ஆவணங்களை மட்டும் தேர்ந்தெடுத்து உள்நோக்கத்துடன் சரிபார்ப்புக்கு அனுப்பி, அதனடிப்படையில் குற்றக் குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது உள்நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் தனது வாதத்தில் சுட்டிக்காட்டினார்.
இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இணை பேராசிரியர் டாக்டர் ஜெ. வெங்கடேஷ் சஸ்பெண்ட் உத்தரவுக்கும், குற்றக் குறிப்பாணை மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும், இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Madras High Court grants interim stay on the suspension order of a Coimbatore Anna University Associate Professor