எடப்பாடி - தங்கமணி விரிசல் முடிவுக்கு வருகிறதா? அதிமுகவில் சமரச முயற்சி தீவிரம்! தங்கமணி எடுக்கப்போகும் முடிவு என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த கருத்து வேறுபாடு தற்போது முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மாற்றங்கள் பல மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. குறிப்பாக, மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து தங்கமணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்து வந்தார். பின்னர் வழங்கப்பட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பையும் ஏற்க விரும்பாத மனநிலையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு சங்ககிரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தங்கமணி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புக்குப் பிறகு, தங்கமணி அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதித்திருப்பது முக்கிய அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமியின் முக்கிய தூணாக நீண்ட காலம் செயல்பட்ட தங்கமணியை மீண்டும் அரவணைக்கும் முயற்சியில் கட்சித் தலைமை ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கமணியின் அதிருப்தியை போக்கும் வகையில் எதிர்காலத்தில் அவருக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்ற உறுதியும் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே, இதுவரை கட்சி நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருந்த தங்கமணி, தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொங்கு மண்டலத்தில் கட்சியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, வேலுமணி மற்றும் தங்கமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை மீண்டும் இணைக்கும் முயற்சியில் தீவிரமாக இருப்பதாகவும், அதற்கான முதல் அறிகுறியாகவே இந்த நிகழ்வு பார்க்கப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனால், கடந்த சில மாதங்களாக அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சி விரிசல் படிப்படியாக குறைந்து, முக்கிய தலைவர்களை ஒரே அணியில் கொண்டு வரும் முயற்சிகள் வேகமெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is the rift between Edappadi and Thangamani coming to an end


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->