திமுக ஆட்சிக் கால ஊழல் ஃபைல்... பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக விவகாரம்: சிபிஎம் சண்முகம் கடும் கண்டனம்!
CPM State Secretary Shanmugam Slams Government Over Pattinapakkam Secretariat Controversy
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
முந்தைய திமுக ஆட்சிக் கால ஊழல்கள் தொடர்பான 3 கோப்புகள் தன்னிடம் இருப்பதாக முதலமைச்சரே கூறியுள்ள நிலையில், அதிகாரத்தில் இருக்கும் அவர்களே அதற்குரிய நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை யார் கொண்டு வந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக எதிர்க்கும் எனக் குறிப்பிட்ட அவர், "அரசுக்கு ஆதரவு அளிப்பதும் தொடரும்; தவறுகளைச் சுட்டிக்காட்டி இடித்துரைப்பதும் தொடரும்" எனக் கூறினார்.
முக்கியமாக, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக வெளியான அரசாணை குறித்துக் காரசாரமான கேள்விகளை எழுப்பினார். "முதலமைச்சர் விஜய் இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறுவதை ஏற்க முடியாது என்றும், முதலமைச்சருக்குத் தெரியாமலேயே அரசாணை வெளியானதாக இருந்தால், அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தங்கள் கட்சி போராட்டங்கள் மூலம் எதிர்த்துத் தடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, இச்சரச்சைக்கு விளக்கமளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தற்போதைய தலைமைச் செயலகத்தில் கடும் இடநெருக்கடி நிலவுவதாகவும், பட்டினப்பாக்கத்தில் விரிவான திட்ட அறிக்கை (DPR) மட்டுமே கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மீனவர் நலனா அல்லது புதிய தலைமைச் செயலகமா என்று வந்தால், முதலமைச்சர் எப்போதும் மீனவர்கள் பக்கமே நிற்பார் என்று கூறிய அவர், கம்யூனிஸ்ட் கட்சியினரின் விமர்சனம் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த சண்முகம், மக்கள் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து போராடி வரும் கம்யூனிஸ்ட் கட்சி மீது, அரசை மட்டும் எதிர்ப்பதாகக் கூறிப் பழியைப் போட்டு பிரச்சனைகளைத் திசைதிருப்பக் கூடாது எனக் காட்டமாகக் கூறினார்.
English Summary
CPM State Secretary Shanmugam Slams Government Over Pattinapakkam Secretariat Controversy