“ரூ.80 ஆயிரம் டிக்கெட் வாங்கி ஏமாந்துட்டோம்!” – யுவன் சிம்பொனி நிகழ்ச்சியில் ரசிகர்கள் அதிருப்தி.. “இதுதான் சிம்பொனி” என மற்றொரு தரப்பு விளக்கம்! - Seithipunal
Seithipunal


யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான பிரபல திரைப்பட பின்னணி இசைகள் மற்றும் மெலடிகளை நேரடியாக இசைக்கலைஞர்களின் மூலம் ரசிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற ‘Walking Through The Rainbow - A Symphonic Experience’ நிகழ்ச்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேநேரம், யுவன் சங்கர் ராஜா நேரடியாக பாடுவார் என எதிர்பார்த்து நிகழ்ச்சிக்கு வந்த சில ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பிரத்யேக இசை நிகழ்ச்சியில், யுவன் சங்கர் ராஜாவின் இசைப் பயணத்தில் முக்கிய இடம்பிடித்த திரைப்படங்களின் பின்னணி இசைகள், காலத்தால் அழியாத மெலடிகள் மற்றும் இதுவரை வெளியிடப்படாத சில பிரத்யேக இசைத் தொகுப்புகள் சிம்பொனி வடிவில் இசைக்கப்பட்டன.

சிம்பொனி நிகழ்ச்சி என்பதால், யுவன் சங்கர் ராஜா பாடல்கள் பாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கவில்லை என்றாலும், சில ரசிகர்கள் நிகழ்ச்சியின் தன்மை குறித்து வேறுவிதமாக புரிந்துகொண்டு டிக்கெட் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக யுவன் நேரடியாக சில பாடல்களையாவது பாடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அது நடைபெறாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் ரசிகர்கள் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். “யுவன் பாடுவார் என்று நினைத்துதான் நிகழ்ச்சிக்கு வந்தோம். குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பாடல்களாவது அவர் பாடியிருக்கலாம். ஆனால், தொடர்ந்து இசைக்கருவிகளின் இசையாகவே இருந்ததால் எங்களுக்கு சற்று ஒரே மாதிரியாகத் தோன்றியது. விஐபி டிக்கெட்டுக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு செய்து வந்தோம். ஆனால், எதிர்பார்ப்பு நிறைவேறாததால் மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் யுவனை நேரில் பார்த்த திருப்தியுடன் செல்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதேநேரத்தில், நிகழ்ச்சியை ரசித்த மற்றொரு தரப்பு ரசிகர்கள், சிம்பொனி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமல் சிலர் விமர்சிப்பதாக தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், “சிலர் இந்த நிகழ்ச்சியை தவறாக புரிந்துகொண்டு வந்திருக்கிறார்கள். சிம்பொனி என்றால் பாடகர்கள் பாடுவது அல்ல; பல்வேறு இசைக்கருவிகளை ஒருங்கிணைத்து நேரடியாக இசைப்பதுதான். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி நேரடியாகக் கேட்கும்போது மிகவும் சிறப்பாக இருந்தது” என்றார்.

யுவன் சங்கர் ராஜாவின் திரை இசைப் பயணத்தில் முக்கியமான தருணங்களாக அமைந்த இசைத் தொகுப்புகள் இந்த நிகழ்ச்சியில் சிம்பொனி வடிவில் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக ‘மங்காத்தா’ படத்தின் பின்னணி இசை அரங்கில் இசைக்கப்பட்டபோது ரசிகர்கள் உற்சாகமடைந்ததாகவும், ரசிகர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து அந்த BGM மீண்டும் இசைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மற்றொரு ரசிகர், “பலரும் இங்கு வந்து யுவன் பாடவில்லை என்று கூறுகிறார்கள். சிம்பொனி என்றால் நேரடியாக இசைக்கலைஞர்கள் இசைக்கருவிகளை வைத்து இசைப்பதுதான். அது தெரியாமல் பாடவில்லை என்று சொல்வது சரியல்ல. சிம்பொனி என்றால் என்ன என்பதை அறிந்து வந்தவர்களுக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம் பிடித்திருக்கும்” என்றார்.

மேலும், ‘மன்மதன்’ திரைப்படத்தின் பின்னணி இசை அரங்கில் சிறப்பாக இருந்ததாகவும், ‘மங்காத்தா’ படத்தின் இசை ரசிகர்களை உற்சாகப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால், ஒரே நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உருவாகியுள்ளன.

யுவன் சங்கர் ராஜாவின் பிரபலமான திரைப்பட இசைகளை முழு சிம்பொனி வடிவில் நேரடியாக கேட்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குவதே நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்த நிலையில், யுவன் பாடுவார் என்ற எதிர்பார்ப்புடன் வந்தவர்களுக்கும், சிம்பொனி இசையை ரசிக்க வந்தவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We feel cheated after buying 80000 tickets Fans express disappointment over Yuvan symphony concert Another group counters This is what a symphony is


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->