உடல் எடை விமர்சனங்களுக்கு எதிராக சல்மான் கான் ஆவேசம்: மேடையில் சட்டையைக் கழற்றி காட்டமான பதில்!
Salman Khan Slams Body-Shamers Shirtless Protest on Bigg Boss Stage in Support of Katrina Kaif
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையான கத்ரினா கைஃப், சமீபத்தில் தனது கணவருடன் பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, அவரது திருமணத்திற்குப் பிந்தைய உடல் எடை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தத் தேவையற்ற விமர்சனங்களுக்கு எதிராக நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் பல திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது பாலிவுட் சுப்பர் ஸ்டார் சல்மான் கானும் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
பிரபல இந்தி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 'வீக் எண்ட் கா வார்' அத்தியாயத்தைத் தொகுத்து வழங்கிய சல்மான் கான், இதுபோன்ற உருவக் கேலிகளுக்கு எதிராக மேடையில் மிகவும் ஆவேசமாகப் பேசினார். "ஒரு பெண் உடல் எடை கூடினாலோ அல்லது கர்ப்பம் தரித்த காரணத்தினாலோ அவரை சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சிப்பது எந்த வகையில் நியாயம்?" என்று கேள்வியெழுப்பிய அவர், கர்ப்பத்திற்குப் பிறகு பெண்கள் மீண்டும் தங்களது இயல்பான ஆரோக்கியமான நிலைக்குத் திரும்புவார்கள் என்றும், பெண்களின் உடல் மாற்றங்களைக் கேலி செய்யும் போக்கு மிகவும் மனவேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்த அவர், "எனக்கு தற்போது 60 வயதாகிறது; என்னால் எனது இளமைக்கால ‘மைனே பியார் கியா’ திரைப்படத்தில் இருந்தது போன்ற உடலமைப்பை எப்போதும் தக்கவைத்துக்கொள்ள முடியாது. மற்றவர்களை விமர்சிப்பவர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்" என்று கூறி, சட்டென்று தனது தொப்பி, ஜாக்கெட் மற்றும் டி-ஷர்ட்டைக் கழற்றி மேடையில் காட்டி அதிர்ச்சி அளித்தார்.
திரைப்படங்கள் பிடிக்கவில்லை என்றால் விமர்சிக்க உங்களுக்கு உரிமையுள்ளது, ஏனெனில் அதற்காக நீங்கள் டிக்கெட் வாங்குகிறீர்கள்; ஆனால் நடிகர்களை நீங்கள் விலைக்கு வாங்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். இறுதியாக, நடிகைகளின் அனுமதியின்றி அவர்களின் உடற்பகுதிகளை வேண்டுமென்றே ஆபாசமாகப் படம்பிடித்து இணையத்தில் பரப்பும் புகைப்படக் கலைஞர்களின் செயலையும் சல்மான் கான் கடுமையாகக் கண்டித்தார்.
English Summary
Salman Khan Slams Body-Shamers Shirtless Protest on Bigg Boss Stage in Support of Katrina Kaif