“திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்குப் புதிய வழிகாட்டுதல்கள்!”: போதைப்பொருள் எச்சரிக்கை, புதிய 'யு/ஏ' பிரிவுகளுடன் ஒன்றிய அரசு உத்தரவு!
Ministry of Information Broadcasting Issues Revised CBFC Guidelines with New U A Age Ratings
மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்திற்கான (CBFC) 1991-ம் ஆண்டின் விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு, புதிய வழிகாட்டுதல்களை ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. திரைப்படங்களின் உள்ளடக்கம், தலைப்புகள் மற்றும் சான்றிதழ் முறைகளை முறைப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
புதிய வழிகாட்டுதல்களின்படி, திரைப்படங்களில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் காட்சிகள் இடம்பெறும்போது சட்டப்பூர்வ எச்சரிக்கை வாசகம் இடம்பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மது, புகையிலை அல்லது போதைப்பொருள் பழக்கங்களை நியாயப்படுத்தும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும், திரைப்படங்களின் தலைப்புகள் ஆபாசமாகவோ, ஆத்திரமூட்டும் வகையிலோ அல்லது யாரையும் புண்படுத்தும் விதத்திலோ இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக அமைதியைப் பேணும் வகையில் வன்முறை, சமூக விரோதச் செயல்கள், பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் மற்றும் நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் சித்தரிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். அத்துடன் குழந்தைகளைக் குற்றவாளிகளாகவோ அல்லது வன்முறைக்கு உட்படுத்தப்படுபவர்களாகவோ காட்டக் கூடாது என்றும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விலங்குகளைத் துன்புறுத்தும் காட்சிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய மாற்றமாக, திரைப்படங்களுக்கான வயதுசார் சான்றிதழ் முறை மாற்றியமைக்கப்பட்டு 'யு/ஏ 7+', 'யு/ஏ 13+' மற்றும் 'யு/ஏ 16+' எனப் புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எவ்விதக் களங்கமும் ஏற்படாத வகையில் திரைப்படங்கள் உருவாக்கப்படுவதைத் திரைப்படச் சான்றிதழ் வாரியம் உறுதி செய்ய வேண்டும் என இந்த வழிகாட்டுதலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Ministry of Information Broadcasting Issues Revised CBFC Guidelines with New U A Age Ratings