“திமுகவினர் விஞ்ஞான ஊழல்வாதிகள்”: ஸ்ரீரங்கம் கோயில் நில ஆக்கிரமிப்பு வழக்கில் திமுக நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு..!
DMK Local Leader booked over Alleged 50 Crore Srirangam Temple Land Encroachment
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் ₹50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக, திமுக பகுதிச் செயலாளர் ராம் குமார் உட்பட 6 பேர் மீது மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசி உள்ள அமைச்சர் ரமேஷ், போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி நிலத்தைப் பத்திரப்பதிவு செய்து திமுகவினர் தங்கள் "விஞ்ஞான ஊழல்" திறனை மீண்டும் நிரூபித்துள்ளதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் உள்ள 7,515 சதுர அடி பரப்பளவு கொண்ட கோயில் பங்களா நிலத்தை, சிலர் தங்கள் பூர்விகச் சொத்து எனக் கூறி போலி ஆவணங்களைத் தயாரித்து, அன்றைய சார்பதிவாளர் உடந்தையோடு திமுக பகுதிச் செயலாளர் ராம் குமார் பெயருக்கு ரூ.2.90 கோடிக்குக் கிரையம் செய்து கொடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், புதுச்சேரி காவல் நிலையத்தில் மூலப் பத்திரங்கள் தொலைந்துவிட்டதாகப் போலிச் சான்றிதழ் பெற்று, இந்த நில மோசடியை அரங்கேற்றியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் ராம் குமார் இத்தகைய சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டதன் மூலம் திமுகவினரின் ஊழல் பின்னணி வெளிப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள திமுக பகுதிச் செயலாளர் ராம் குமார், இந்தச் சொத்து ரங்கசாமி ஐயங்கார் குடும்பத்தினரின் பூர்வீகச் சொத்து என்றும், அனைத்து ஆவணங்களும் முறையாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தவறாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தன் பதவியைப் பறிப்பதற்காகக் கட்சியினரே சிலர் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் விளக்கமளித்துள்ளார்.
English Summary
DMK Local Leader booked over Alleged 50 Crore Srirangam Temple Land Encroachment