“திமுக ரூ.5,000 கொடுத்தாலும் வாங்கிக்கிட்டு மக்கள் தவெகவிற்கே வாக்களிப்பார்கள்!” – உதயநிதியை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா
Even if the DMK offers 5000 people will accept the money but vote for TVK Aadhav Arjuna criticizes Udhayanidhi
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், திமுகவையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார். திமுகவுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும், பணம் கொடுத்தாலும் மக்கள் தவெகவுக்கே வாக்களிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த ஆதவ் அர்ஜுனா, திமுகவின் வாரிசு அரசியலை விமர்சித்து பேசினார். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் குறித்து கருத்து தெரிவித்த அவர், “மு.க.ஸ்டாலின் பிள்ளை என்ற ஒரே காரணத்திற்காக அரசியலுக்கு வரக்கூடாது. எங்களைப் போல் அடிமட்டத்திலிருந்து உழைத்து வர வேண்டும்” என்றார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசியல் புரியவில்லை என விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, “நேரடி வாரிசாக வந்து துணை முதலமைச்சராகி, இப்போது எதிர்க்கட்சித் தலைவரானவுடன் நம்மைப் பார்த்துக் கிண்டல் செய்கிறார். ஆளுங்கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பெயரெல்லாம் தெரியவில்லை என்கிறார்” என்று கூறினார்.
தவெக சார்பில் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர்கள் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், “நாங்கள் சாமானியர்களாக இருந்து மேலே வந்தவர்கள். ரூ.30 கோடி பணமோ, குடும்பப் பின்னணியோ இல்லாமல், ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சாமானியர்களை எங்கள் தலைவர் விஜய் எம்எல்ஏக்களாகவும் அமைச்சர்களாகவும் அமர வைத்துள்ளார். இதைத்தான் 1967-ல் அண்ணா செய்தார்” என்றார்.
தவெகவை ஆரம்பத்தில் ‘ரீல்ஸ் கட்சி’, ‘வாட்ஸ்அப் கட்சி’ என விமர்சித்ததாகவும், ஆனால் விஜய்யின் தலைமையில் தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மேலும், “எங்கள் தலைவரின் ஒரே முகத்தை வைத்து ஆட்சியைப் பிடித்துள்ளோம்” என்றும் கூறினார்.
தவெக ஆட்சியில் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். திமுக ஆட்சியில் முதலமைச்சர் குடும்பம், அமைச்சர்களின் குடும்பம், தனிப்பட்ட உதவியாளர்கள் உள்ளிட்டோர் வழியாக சதவீதம் சென்றதாக அவர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற நடைமுறைகள் தற்போதைய ஆட்சியில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தவெக அமைச்சர்கள் மக்களுடன் மக்களாக இருப்பதால் அவர்களின் பெயர்கள் அனைவருக்கும் தெரியாமல் இருக்கலாம் என்றும், ஆனால் அவர்கள் எந்த ஊழல் கல்லூரியையும் கட்டவில்லை என்றும் ஆதவ் அர்ஜுனா விமர்சித்தார்.
தொடர்ந்து இடைத்தேர்தல் அரசியல் குறித்துப் பேசிய அவர், திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றம்சாட்டினார். “திமுகவின் இடைத்தேர்தல் அரசியலே ஓட்டுக்கு ரூ.5,000 கொடுப்பதுதான். எ.வ.வேலு, நேரு போன்றவர்கள் வந்து பூத்துக்கு இவ்வளவு என பணம் இறைப்பார்கள்” என்று அவர் தெரிவித்தார்.
2026 பொதுத்தேர்தலில் தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்காமல், மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் மட்டுமே பெற்று விஜய் வெற்றி பெற்றதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறினார். வரும் இடைத்தேர்தல்களிலும் தவெக வாக்குக்கு பணம் கொடுக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
மதுராந்தகம் பகுதியில் தலித் காலனிகள் மற்றும் வன்னியர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகள் இருப்பதாக மக்கள் தங்களிடம் தெரிவித்ததாகக் கூறிய ஆதவ் அர்ஜுனா, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக தானே நேரடியாக வந்திருப்பதாகவும், உடனடியாக சாலை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும், குடிநீர், சாலை, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றித் தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இறுதியாக, “திமுகவினர் ஓட்டுக்கு ரூ.5,000 கொடுத்தாலும், அதை தீபாவளி துணி எடுக்கக் கொடுக்கும் பணமாக வாங்கிக்கொண்டு மக்கள் தவெகவிற்கே வாக்களிப்பார்கள். திமுக இங்கு டெபாசிட் கூட வாங்க முடியாது” என்று ஆதவ் அர்ஜுனா கூறினார். அவரது இந்தப் பேச்சு மதுராந்தகம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Even if the DMK offers 5000 people will accept the money but vote for TVK Aadhav Arjuna criticizes Udhayanidhi