டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 3 செட் சீருடைக்கு ரூ.6,000.. நவம்பர் 15 முதல் கட்டாயம் – முழு விவரம்! - Seithipunal
Seithipunal


டாஸ்மாக் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்ட சீருடையை கட்டாயம் அணிய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 3 செட் சீருடைகளுக்காக ஒரு ஊழியருக்கு ரூ.6,000 வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, சீருடை முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு டாஸ்மாக் பணியாளருக்கும் ஆண்டுக்கு 3 செட் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் சீருடைகளை கொள்முதல் செய்து, ஒவ்வொரு ஊழியரின் அளவை எடுத்து, தைத்து, விநியோகிப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, சீருடைக்கான தொகையை நேரடியாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

ஒரு செட் சீருடைக்கு துணி மற்றும் தையல் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ.2,000 வழங்கப்படும். இதன்படி 3 செட் சீருடைகளுக்கு ஒரு ஊழியருக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீருடைகளின் நிறங்களும் பணிக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு இளம் நீல நிற சட்டையும், கடற்படை நீல நிற பேண்டும் வழங்கப்பட உள்ளது. விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு இளம்பழுப்பு நிற சட்டையும், கரும் சாம்பல் நிற பேண்டும் சீருடையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீருடையின் இடது நெஞ்சுப் பகுதியில் டாஸ்மாக் நிறுவனத்தின் லோகோ இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரும் 15.11.2026 முதல் அனைத்து டாஸ்மாக் பணியாளர்களும் வேலை நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட சீருடையை கட்டாயம் அணிய வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டாஸ்மாக் ஊழியர்களுக்கான பிற நலத்திட்டங்கள் குறித்தும் அரசு தரப்பில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.10,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும், கடைகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காக மாதம் ரூ.5,000 வழங்கப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அறிவித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மதுபாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதலாக பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், பல்வேறு டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், தமிழகம் முழுவதும் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக கூறப்படும் 67 பணியாளர்களை டாஸ்மாக் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து பல இடங்களில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடைகளை பராமரிப்பதற்காக மாதம் ரூ.5,000 வழங்குவது, ஊதிய உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது சீருடைக்காக ஆண்டுக்கு ரூ.6,000 தனியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களுக்கான நலத்திட்டங்களை அதிகரிப்பதன் மூலம் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூலிப்பது உள்ளிட்ட முறைகேடுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்திலும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 15 முதல் சீருடை கட்டாயம் என்ற அறிவிப்பு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Good news for TASMAC employees Rs 6000 for 3 sets of uniforms Mandatory from November 15 Full details


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->