தமிழகத்தில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! ஒரே நாளில் 253 பேருக்கு உறுதி.. 18 நாளில் 3,096 பேர் பாதிப்பு!
Rapid rise in Dengue cases in Tamil Nadu 253 people confirmed infected in a single day 3096 cases reported in 18 days
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 18-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 253 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மூன்று நாட்களாக 200-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கும் சூழல் உருவாகியுள்ளது. தேங்கியுள்ள தண்ணீரில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் பெருகுவதற்கான வாய்ப்பு இருப்பதால், டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 15-ம் தேதி ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 133 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அடுத்த நாளான செப்டம்பர் 16-ம் தேதி இந்த எண்ணிக்கை 283 ஆக அதிகரித்தது. செப்டம்பர் 17-ம் தேதி 244 பேருக்கும், செப்டம்பர் 18-ம் தேதி 253 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் தொடர்ந்து மூன்று நாட்களாக 200-க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் டெங்கு குறித்த அச்சமும் அதிகரித்துள்ளது.
2026-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 3,476 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையிலான 18 நாட்களில் மட்டும் 3,096 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 1-ம் தேதி முதல் செப்டம்பர் 18-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 10 ஆயிரத்து 574 பேருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 16,830 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மாவட்ட வாரியாக பார்க்கும்போது சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10 மாவட்டங்களில் மட்டும் 187 டெங்கு நோயாளிகள் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்ற மாவட்டங்களில் 57 பேர் டெங்கு பாதிப்புக்காக மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்படி, மாநிலம் முழுவதும் தற்போது 244 பேர் டெங்கு பாதிப்புக்காக மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
டெங்கு பாதிப்பு மட்டுமின்றி, பல்வேறு வகையான காய்ச்சல்களாலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் காய்ச்சல் காரணமாக 1,320 பேர் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, சென்னையில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக மழைக்குப் பிறகு வீடுகள், கட்டுமானப் பகுதிகள், காலி மனைகள், தண்ணீர் தொட்டிகள், பழைய டயர்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கும் இடங்களை உடனடியாக சுத்தம் செய்வதுடன், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ள இடங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களும் உள்ளாட்சி அமைப்புகளும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதாரத்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Rapid rise in Dengue cases in Tamil Nadu 253 people confirmed infected in a single day 3096 cases reported in 18 days