வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுத்தடுத்து 7 இடங்களில் குண்டு வெடிப்பு; பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்..!
Security measures intensified following serial bomb blasts at seven locations in the Bangladeshi capital Dhaka
வங்கதேச தலைநகர் டாக்காவின் நேற்று பிற்பகல் தொடங்கி நள்ளிரவு வரை பல்வேறு பகுதிகளில், அடுத்தடுத்து நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, டாக்கா நகரம் முழுவதும் காவல்துறையின் அதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
டாக்காவின் ஜத்ராபாரி, மாலிபாக், அக்ரகான், மொஹாகாலி, பாபுபஜார், மொக்பஜார் மற்றும் ராம்புரா உள்ளிட்ட 07 இடங்களில் நேற்று பிற்பகல் 02.25 மணி முதல் இரவு 11;00 மணி வரை இந்த குண்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் குண்டுகள் வெடித்தாலும், ஆளில்லாத இடங்களிலும் சாலைகளிலும் பெரும்பாலும் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்றும், இந்த சம்பவங்களில், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 03 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், நேற்று இரவு 10 மணியளவில் காஃப்ருல் காவல் நிலையம் அருகே ஆளில்லாத பயணிகள் பேருந்து ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து டாக்கா மாநகர காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக நகரின் முக்கிய சாலைகள், மேம்பாலங்கள், நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக போலீஸ் ரோந்துப் பணியும், கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், டாக்காவுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் முக்கியமான நான்கு பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. குண்டு வெடிப்பு சம்பவ இடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளும் சேகரிக்கப்பட்டு வருகிறது என டாக்கா காவல்துறை துணை ஆணையர் நியாஸ் மெஹ்தி (Niaz Mehedi) தெரிவித்துள்ளார்.
English Summary
Security measures intensified following serial bomb blasts at seven locations in the Bangladeshi capital Dhaka