ஆட்டிசத்திற்கு ஸ்டெம் செல் சிகிச்சை; உரிய விதிமுறைகள்; மத்திய சுகாதார அமைச்சகம் முக்கிய அறிவிப்பு..!
Union Health Ministry issues important announcement regarding stem cell therapy for autism
மருத்துவ நிறுவனங்கள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 2010-ஐ பின்பற்றும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சையை ஒழுங்குபடுத்துவது குறித்த அறிவுறுத்தலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த 2026 செப்டம்பர் 16 அன்று வெளியிட்டது.
இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சி, சிகிச்சைக்கான தற்போதைய விதிமுறைகளை இந்த அறிவுறுத்தல் மீண்டும் வலியுறுத்துகிறது. வழக்கமான மருத்துவ நடைமுறையில் தரப்படுத்தப்பட்ட சிகிச்சையாக ஸ்டெம் செல் சிகிச்சையை மேற்கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பட்டியலில் உள்ள நோய்கள் அல்லது மருத்துவக் காரணங்களுக்கு மட்டுமே அது அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தொடர்பாக, ஆட்டிச சிகிச்சையில் எந்த வகையான ஸ்டெம் செல்லை மருத்துவ ரீதியாகப் பயன்படுத்துவதும், முறையாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று இந்த அறிவுறுத்தல் நிபந்தனை விதிக்துள்ளது.

அத்துடன், இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், உயிரி தொழில்நுட்பத் துறை ஆகியவை இணைந்து வெளியிட்ட ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கான தேசிய வழிகாட்டுதல்கள் 2017, மத்திய அரசு அவ்வப்போது வெளியிடும் இதர தொடர்புடைய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உரிய விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், இது தொடர்பான உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை அனைத்து மாநில, மாவட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள், ஸ்டெம் செல் ஆராய்ச்சி, சிகிச்சை, நிர்வாகத்தில் ஈடுபட்டுள்ள அரசு, தனியார் மருத்துவ நிறுவனங்களிடம் விளக்குமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary
Union Health Ministry issues important announcement regarding stem cell therapy for autism