பொன்னேரி அரசு மருத்துவமனையில் கொடூரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை வளாகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக ஊழியர் மீது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்து வரும் ராஜேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் வழக்கம்போல் மருத்துவமனை வளாகப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், எதிர்பாராத விதமாகத் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ராஜேஸ்வரி மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் அலறிய அவருடைய குரலைக் கேட்டு ஓடிவந்த சக ஊழியர்களும் பொதுமக்களும் உடனடியாகத் தீயை அணைத்து அவரை மீட்டனர்.

இந்தத் தாக்குதலில் ராஜேஸ்வரிக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் பொன்னேரி மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார், இக்கொடூரச் செயலுக்குத் தனிப்பட்ட முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற பல்வேறு கோணங்களில் வழக்குப் பதிவு செய்து விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளியை விரைந்து பிடிக்க மருத்துவமனை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்புக் கேமரா (CCTV) பதிவுகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பெண் ஊழியர் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், அப்பகுதி மக்களிடையேயும் சக ஊழியர்களிடையேயும் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horrific Attack at Ponneri Govt Hospital Temporary Staff Set on Fire Critical in Hospital


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->