'ஜெம்' வீரமணி வழக்கில் மௌனம் ஏன்? கம்யூனிஸ்டுகளின் குரல் எங்கே? - அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி!
Minister Rajmohan Questions CPMs Silence on Gem Granites Case Clarifies Pattinapakkam Secretariat Issue
கடந்த ஆட்சிக் காலத்தில் மூடி மறைக்கப்பட்ட 'ஜெம்' கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை போக்சோ வழக்கைக் கம்யூனிஸ்டுகள் கண்டிக்கிறார்களா இல்லையா என்றும், இதுகுறித்துப் பட்டவர்த்தனமான தங்களது நிலைப்பாட்டை அவர்கள் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக - கம்யூனிஸ்ட் இடையேயான கூட்டணி ஒரு ஆரோக்கியமான ஜனநாயகக் கூட்டணி எனக் குறிப்பிட்டார். கூட்டணிக்குள் இருந்துகொண்டே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வைக்கும் விமர்சனங்களை வரவேற்பதாகவும், அரசாங்கத்தின் மீது சுட்டிக்காட்டப்படும் குறைகளைக் கேள்வி கேட்க அவருக்கு முழு உரிமை உள்ளது என்றும் தெரிவித்தார்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அரசாணை குறித்துப் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் மீனவர்களின் தொடர்ச்சியான கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் மதிப்பளித்து, பிறப்பிக்கப்பட்ட அரசாணையை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு. பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டம் குறித்து இன்னும் எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. மெரினா கடற்கரையில் பேனா சிலை அமைத்தே தீருவேன் என அடம்பிடித்த முந்தைய ஆட்சியாளர்களைப் போல அல்லாமல், மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம்" என்று விளக்கமளித்தார்.
தொடர்ந்து 'ஜெம்' கிரானைட்ஸ் விவகாரத்தை எழுப்பிய அவர், முந்தைய ஆட்சியில் கண்டும் காணாமல் விடப்பட்ட இவ்வழக்கில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பதை அறிந்துகொள்ள தாம் ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார். கோபத்துடன் கேட்காமல், ஒரு ஜனநாயக ரீதியிலான கேள்வியாகவே இதை முன்வைப்பதாகக் கூறிய அவர், பாலியல் குற்றங்களுக்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் குரல் இந்த விவகாரத்திலும் தெளிவாக எதிரொலிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
English Summary
Minister Rajmohan Questions CPMs Silence on Gem Granites Case Clarifies Pattinapakkam Secretariat Issue