"கூட்டத்தைப் பார்த்து பயந்தேன்!அப்பாவை கட்டிப்பிடித்துக்கொண்டேன்! 'வேட்டைக்காரன்' நினைவுகளை பகிர்ந்த ஜேசன் சஞ்சய்!
I was scared by the crowd I hugged my dad Jason Sanjay shares memories of Vettaikaran
நடிகர் விஜய்யின் மகனும், இயக்குநருமான ஜேசன் சஞ்சய், சிறுவயதில் 'வேட்டைக்காரன்' படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருக்கும் பேட்டி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள 'சிக்மா' திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜூ சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. நீண்டகால படப்பிடிப்புக்குப் பிறகு படத்தின் பணிகள் நிறைவடைந்துள்ளன. முதலில் ஜூலை 31-ஆம் தேதி வெளியாக இருந்த படம், வெளியீட்டு அட்டவணை மாற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஜேசன் சஞ்சய், தனது சிறுவயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அதில், "'வேட்டைக்காரன்' படத்தில் நான் ஆடிய காட்சியை இப்போது பார்த்தால், நாமா இதையெல்லாம் செய்திருக்கிறோம் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அந்த படப்பிடிப்பு இன்றும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அப்போது எனக்கு 9 வயதுதான் இருக்கும். சிறுவயதிலிருந்தே அடிக்கடி அப்பாவுடன் படப்பிடிப்பு தளங்களுக்கு செல்வேன். அதே ஆர்வத்தில் அந்த பாடலிலும் நடிக்க சம்மதித்தேன்" என்றார்.
மேலும், "படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பிறகுதான் அங்கிருந்த பெரிய கூட்டத்தை பார்த்து பயந்துவிட்டேன். உடனே அப்பாவை தேடிச் சென்று கட்டிப்பிடித்துக்கொண்டேன். அதன் பிறகு அனைவரும் தைரியம் கொடுத்ததால் எப்படியோ அந்த காட்சியில் நடித்துவிட்டேன்" என்றும் அவர் சிரித்தபடி நினைவுகூர்ந்தார்.
ஜேசன் சஞ்சய் பகிர்ந்த இந்த சிறுவயது நினைவுகள், விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக, படப்பிடிப்பு தளத்தில் பயந்து தந்தையை கட்டிப்பிடித்த சம்பவத்தை அவர் இயல்பாக பகிர்ந்த விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
I was scared by the crowd I hugged my dad Jason Sanjay shares memories of Vettaikaran