'எல்லோருக்கும் சாதியற்ற சான்றிதழ் கிடைக்க வழி செய்யணும்'...! பார்த்திபன் மனுவுக்கு 4 வாரங்களில் பதில் தர அரசுக்கு உத்தரவு...!
We must make way everyone get non caste certificate Government ordered respond Parthiban petition within 4 weeks
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஏப்ரல் மாதம் சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழைப் பெற்ற நடிகர் பார்த்திபன், அதனை நீதிபதி தண்டபாணி முன்னிலையில் சமர்ப்பித்தார். அப்போது, இந்தச் சான்றிதழின் பயன் தனிநபருக்கு மட்டும் அல்லாமல், இதேபோன்று விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென நீதிபதி கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, இதுதொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்ய இருப்பதாக பார்த்திபன் அறிவித்திருந்தார்.

அதன்படி, சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாமதமின்றி சான்றிதழ் வழங்கும் வகையில் உரிய சட்டம் அல்லது அரசாணை பிறப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை பார்த்திபன் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறைக்காக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கி, அரசாணை வெளியிட வேண்டும் என 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதமே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அப்போது ஆளுநருக்கும் அன்றைய அரசுக்கும் இடையிலான நிர்வாக சூழ்நிலை காரணமாக அந்த உத்தரவு நடைமுறைக்கு வராமல் நிலுவையில் இருந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது அத்தகைய சூழ்நிலை இல்லாத நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி தேவையான சட்டம் அல்லது அரசாணையை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு உள்துறை, வருவாய்த் துறை மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தது.
English Summary
We must make way everyone get non caste certificate Government ordered respond Parthiban petition within 4 weeks