'உடனடியாக போரை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் ரத்தாகும்'; தாய்லாந்து - கம்போடியாவுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை..!
Trump warns that trade with Thailand and Cambodia will be cut off if the war is not stopped immediately
இருநாடுகளும் போரை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் ரத்தாகும் என்று தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. 817 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையில் அமைந்துள்ள பிரியா விகார் என்ற பழமையான கோயிலின் உரிமை தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நிலவி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த 1962-ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம், இந்தக் கோயில் கம்போடியாவிற்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது. ஆனால், இந்த தீர்ப்பை தாய்லாந்து முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், கடந்த மே மாத இறுதியில் கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து எல்லையில் மீண்டும் பதற்றம் அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து நடந்த கடுமையான மோதல்களில் இதுவரை தாய்லாந்து தரப்பில் 20 பேரும், கம்போடியா தரப்பில் 13 பேரும் என 33 பலியாகியுள்ளனர். இந்த மோதல்களால் சுமார் 1,30,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இரு நாடுகளுக்குமிடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ‘தாய்லாந்து மற்றும் கம்போடியா தலைவர்களுடன் தனித்தனியாகப் பேசியதாகவும், போரை உடனடியாக நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து சண்டையிட்டால், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் ரத்தாகும் என்று இரு தரப்பையும் எச்சரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தாய்லாந்து தரப்பும் கொள்கை அளவில் போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தாலும், கம்போடியாவிடம் இருந்து அதன் உண்மையான நோக்கம் தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், இந்த போர் நிறுத்தம் ஒப்பந்தம் தொடர்பில் டிரம்பின் தலையீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெள்ளை மாளிகையோ அல்லது சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களோ இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாய்லாந்து- கம்போடிய இடையே பதற்றம் அதிகரித்துள்ளதால் எல்லையோரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என இந்தியத் தூதரகம் தனது மக்களுக்கு பயண ஆலோசனையை வழங்கியுள்ளது.
English Summary
Trump warns that trade with Thailand and Cambodia will be cut off if the war is not stopped immediately