இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதர் இளையராஜா: ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்..!
AR Rahman praises Ilayaraja as a great man who combines Himalayan feats and simplicity
இசை உலகில் தமிழுக்கும், தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழகத்துக்கே தனி பெருமைத் தேடி தந்தவர் இளையராஜா என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி யுள்ளதாவது:
'இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்லாது தமிழகத்துக்கே தனி பெருமைத் தேடி தந்தவர் இளையராஜா. இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கமைந்த மாமனிதர் அவர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கு நிலவிய வேறுபாடுகளை தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை அவர்.

குறிப்பாக திரை இசையைக் கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில், அவர் நிகழ்த்தியிருக்கும் சிம்பொனி எனும் சாதனை, ஒவ்வொரு இசை கலைஞருக்கும் இசைத் துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்கக் கூடிய சாதனையாக இருக்கிறது. அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எனக்கு எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சி உண்டு. இந்தக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக்கொள்வதில் உங்களைப் போலவே நானும் பெரும் மகிழ்ச்சிகொள்கிறேன்.
இளையராஜாவின் பொன் விழா ஆண்டை தமிழக அரசே ஒருங்கிணைத்து கொண்டாடுவதை இளையராஜாவுக்கு மட்டுமான விழாவாக அல்லாமல், ஒட்டுமொத்த இசை கலைஞர்களுக்கான அங்கீகாரமாக பார்க்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே.' என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
English Summary
AR Rahman praises Ilayaraja as a great man who combines Himalayan feats and simplicity