ஈழத்தில் கார்த்திகை மலர் சூடிய இந்திய தூதர்., இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?! - Seithipunal
Seithipunal


இந்திய தூதர் ஈழத்தில் கார்த்திகை மலர் சூடி இருப்பதால், இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் வருமா? என்பது குறித்து பாமக அருள் இரத்தினம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரின் அந்த அறிக்கையில், "யாழ்ப்பாணத்துக்கான இந்திய தூதர், ஈழத்தில் நடந்த ஒரு தமிழ்த் தேசிய விழாவில் ஈழத்தமிழர்களின் தேசிய அடையாளமான 'கார்த்திகை பூ' சூடி பங்கேற்றுள்ளார். இது ஒரு தற்செயல் நிகழ்வா, தமிழர்களை காட்டி இலங்கையை இந்தியாவின் வழிக்கு கொண்டுவரும் வியூகமா, அல்லது இந்திய நிலைப்பாட்டில் நிகழ்ந்துள்ள வரவேற்கத்தக்க மாற்றமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தமிழீழத்தில் தேசிய விடுதலைக்காக தியாகம் செய்த போராளிகளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 27 மாவீரர் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழீழப் போராளிகள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நல்லூர் மாவீரன் கிட்டு பூங்காவில் "கார்த்திகை வாசம் மலர் முற்றம்" எனும் மரம் நடும் விழா நவம்பர் 20 - 26 வரை நடைபெறுகிறது (நவம்பர் 26 தேசியத் தலைவரின் பிறந்தநாள்). இதனை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஒருங்கிணைத்துள்ளது.

ஈழத்தமிழர்களின் மஞ்சள் - சிவப்பு கொடிகளுடன் நடந்த இந்த விழாவினை இலங்கைக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தொடங்கி வைத்தார். அங்கு அவருக்கு ஈழத்தமிழர் தேசிய அடையாளமான கார்த்திகை பூ (செங்காந்தள் மலர்) சூடப்பட்டது.

(நல்லூர் மாவீரன் கிட்டு பூங்கா 1994-ல் தமிழ்ச்செல்வன் அவர்களால் திறக்கப்பட்டது. 2009 இன அழிப்பு போரின் போது சிங்களப்படைகளால் சிதைக்கப்பட்டது. 2021 மார்ச் மாதம் இந்த பூங்காவின் முகப்பை விஷமிகள் தீவைத்து எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கிடைக்குமா?

இலங்கை தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பின்னால், தொலைநோக்கு பாதுகாப்பு வியூகத்தை விட, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் தற்காலிக பொருளாதார நோக்கங்களே முதன்மையானதாக இருக்கிறது என்கிற கருத்தினை மறுத்துவிட முடியாது. இந்திய வெளியுறவு செயலாளர் நவம்பர் 2-ல் இலங்கைக்கு சென்றபோது, கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51% பங்குகள் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.

வரலாறு நெடுகிலும் இந்தியப் பேரரசினால் ஈழத்தமிழர்கள் பகடைக் காய்களாக மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளனர். அதே நேரத்தில், புவி அரசியல் ரீதியில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடலின் பெரும் பகுதி ஈழத்தமிழர் வசமே உள்ளது. ஈழத்தமிழர் உரிமையை நிலைநாட்ட இந்திய அரசு உண்மையாகவே முன்வருமானால் அதனால் ஈழத்தமிழரின் நீதி, இந்தியாவின் பாதுகாப்பு என இரு தரப்பினருமே பயன்பெற முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

எனவே, ஈழத்தில் இந்திய தூதர் 'கார்த்திகை மலர்' சூடிய நிகழ்வு தற்காலிகமானதாக இருக்கக் கூடாது. இது ஒரு திட்டமிட்ட வியூக நடவடிக்கையின் குறியீடாக அமைய வேண்டும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பினை உறுதி செய்வதில் ஈழத்தமிழரின் பங்களிப்பை இந்தியப் பேரரசு இனியாவது உணர வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

குறிப்பு: செங்காந்தள் மலர் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அரசு மலர் ஆகும். தாவரவியல் பெயர், 'கிளாரிசா சுபேர்பா' (Gloriosa superba). இது கார்த்திகை மாதம் பூக்கும். சங்க இலக்கியங்களில் அதிகம் இடம்பெற்றுள்ளது. தமிழ் மன்னர்கள்  போருக்கு செல்லும் போது காந்தள் மலர் மாலைகளை அணிந்து கொண்டனர்."

இவ்வாறு பாமக அருள் இரத்தினம் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk Arul say about Indian Ambassador wearing the Karthika flower in Eelam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->