திருமணத்தில் நம்பிக்கை இல்லை – லிவ்-இன் ரிலேஷன்ஷிப் இருப்பதே நல்லது.. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
No faith in marriage it is better to have a live in relationship Actress Aishwarya Lakshmi
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, திருமணம் குறித்து தனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படையாக பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மலையாள திரைப்படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர், தமிழில் விஷால் நடித்த “ஆக்சன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஜகமே தந்திரம், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன், மாமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள மலையாள படம் “ஆஷா” விரைவில் வெளியாக உள்ளது. ஜோஜு ஜார்ஜ், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை ஜஃபர் சனல் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா லட்சுமியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
“என் 34 ஆண்டுகள் வாழ்க்கையில் பல திருமணங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையாக மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகள் மிகவும் குறைவாக தான் இருக்கிறார்கள். பலரது வாழ்க்கையில் தனிப்பட்ட வளர்ச்சி இல்லை என எனக்குத் தோன்றுகிறது. அதனால் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை,” என்று அவர் கூறினார்.
மேலும், இளம் வயதில் திருமணம் குறித்து பல கனவுகள் இருந்தாலும் காலப்போக்கில் தனது பார்வை மாறிவிட்டதாகவும், வாழ்க்கைக்கு திருமணம் அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
“வாழ்க்கைத்துணை வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் திருமண வாழ்க்கையில் இருவருக்கும் நிம்மதி இல்லாத நிலை வரக்கூடாது. அதனால் திருமணம் செய்யாமல் உறவில் இருப்பது நல்லது என்று நான் நினைக்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், தனது இந்த கருத்து காதலுக்கு எதிரானது அல்ல என்றும், சமூக அமைப்பாக இருக்கும் திருமண முறையைத்தான் தாம் ஏற்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறிய இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
No faith in marriage it is better to have a live in relationship Actress Aishwarya Lakshmi