சீனாவில் வினோத பழக்கம்.. இளைஞர்களைக் கவரும் ஒரு நாள் திருமணம்.!
Oneday marriage in China
உலகம் முழுவதிலும் பல வினோத பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதில் முன்னோடியாக இருப்பது சீனா. அதன்படி ஒரு நாள் திருமணம் என்னும் புதிய கலாச்சார நடைமுறை தற்போது சீனாவில் வேகமாக பரவி வருகிறது.
சீனாவின் ஹெபெய் இன்றைய மாகாணத்தில் உள்ள கிராமங்களில் ஒரு நாள் திருமணங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளனர். இதற்கு காரணம் அங்கு கடைபிடிக்கப்படும் நடைமுறைதான் என கூறப்படுகிறது.
ஏழ்மை காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஆண்கள் திடீரென உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களின் உடல்களை புதைக்க முடியாது. இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்க்கத்தில் சேர முடியாது என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.

இதனால் பாவம் ஏற்படுவதாகவும் இந்த பாவம் பல தலைமுறைகளுக்கு தொடரும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன் காரணமாக இறந்த பின்பு தங்கள் மூதாதையருடன் ஒன்று சேர வேண்டும் என்றால் அனைத்து ஆண்களுக்கும் கட்டாயம் திருமணம் ஆகி இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் திருமணம் செய்து கொள்பவர்கள் தங்களுக்கு திருமணம் நடந்துவிட்டதை மூதாதையர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவர்களின் குடும்ப கல்லறைக்கு செல்கின்றனர். உள்ளூர் பெண்கள் இப்படி ஒரு நாள் திருமணம் செய்ய தயங்குவதால், வெளியூரில் இருந்து ஏழை குடும்பத்து பெண்கள் பணத்திற்காக வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
இந்த திருமணத்திற்கு தனிப்பட்ட திருமண தலைவரும் உள்ளனர். திருமணமான பல பெண்களும் அவர்களின் குடும்பத்தினருக்கே தெரியாமல் இது போன்ற ஒருநாள் திருமணங்களை செய்து கொள்கின்றனர். ஆனால் இந்த திருமணங்கள் எதுவுமே சட்டப்பூர்வமானவை கிடையாது. சடங்கிற்காக மட்டுமே செய்யப்படுகின்றன. திருமணம் முடிந்த மறுநாள் யாரோ ஒருவராக இருவரும் பிரிந்து செல்கின்றனர்.