இனி நாம போற பாதை சிங்கப் பாதையா இருக்கும்...! - திருச்சி விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"திருச்சியில் இந்த சிறப்பான மாபெரும் விழாவில் பேசுவதுல் மகிழ்ச்சி அடைகிறேன். விழா அல்ல இது ஒரு மாநாடு... அப்படிப்பட்ட மாநாட்டை ஏற்பாடு செய்திருக்க கூடிய அமைச்சர் நேருவுக்கு முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றியை பாராட்டும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நேருவை பாராட்டுவது என்னை நானே பாராட்டுகிற மாதிரி தான்.

அந்த அளவுக்கு என்னுள் கலந்தவர் அமைச்சர் நேரு. திருச்சி தீரர்கள் கோட்டத்தில் தலைமை தீரர் நேரு. பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்து, அதை எல்லாம் வென்று இந்த மத்திய மண்டலத்தை வலுவாக வளர்த்தெடுத்திருக்கிறார்.இந்த பயணத்தில் அவர் சந்தித்த இடர்பாடு, இழப்புகள் ஏராளம். அதெல்லாம் ஈடு செய்ய முடியாத இழப்புகள். அது அத்தனையும் இந்த இயக்கத்திற்காக, எங்களுக்காக, நமக்காக தாங்கிக் கொண்டிருக்கின்றார்.

இப்போது அதே உறுதியோடு செயல்பட்டு வருகிறார். ஆட்சி அமைந்த பிறகு இந்த அமைச்சரவையில் அவருக்கு நகர்ப்புற வளர்ச்சி துறை வழங்கியதும், அந்த நம்பிக்கையை காப்பாற்றி இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லா மாநகரங்கள், நகரங்கள், பேரூர்கள் அனைத்தையும் மிகச்சிறந்த வகையில வளர்த்து வருகிறார்.அதற்கு எடுத்துக்காட்டு தான் பஞ்சப்பூரில் திறந்து வைத்துள்ள முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் அமைந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்.

அதை பார்த்தவுடன் எனக்குள்ள என்ன தோணுச்சுன்னா, இது பஞ்சப்பூரல்ல... எல்லா ஊரையும் மிஞ்சப் போகும் மிஞ்சப்பூர் .தமிழ்நாட்டோட இதய பகுதியாக விளங்குகிற இந்த திருச்சிக்கு இப்படி ஒரு பேருந்து நிலையம் நிச்சயம், அவசியம் தேவை தான். அமைச்சர் நேரு திருச்சி மாவட்டத்திற்கு ரொம்ப ஸ்பெஷலா பார்த்து பார்த்து இதை உருவாக்கி இருக்கிறார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர் ஆனதுமே அரசு பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்று சொன்னார். தற்போது மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்று வருகிறார்கள். இந்த ஆண்டும் அப்படித்தான். கல்வித் தரமும் பெருமளவு உயர்ந்திருக்கு. இடைநிற்றல் கூடாதுன்னு ஸ்கூல் போகாம இருக்கக்கூடிய மாணவர்களின் வீடு வீடாக தேடி தேடி போய் அறிவுரை சொல்லி வேண்டிய உதவிகள் செய்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அனுப்புறோம்.

நான் டெல்லி சென்றபோது அங்கிருந்த கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அங்குள்ள மாடல் ஸ்கூல் ஒன்றினை நான் பார்த்தேன். இதைவிட சிறப்பாக தமிழ்நாடு முழுக்க மாதிரி பள்ளிகள் உருவாகணும் என்று அப்பவே நான் முடிவு செய்தேன்.என்னோட அந்த கனவை ரொம்ப சிறப்பாக அன்பில் மகேஷ் எல்லா மாவட்டத்திலும் செயல்படுத்தி காட்டி இருக்கிறார். மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலக மாதிரி திருச்சிக்கும் ஒரு அறிவுச் சுரங்கம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து தற்போது பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டப்பட்டு மிகப் பிரமாண்டமாக இந்த நூலகம் உருவாகி வருகிறது.

அமைச்சர்கள் நேருவும், அன்பில் மகேசும் சிறப்பக செயல்பட்டு எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறார்கள். அது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இரண்டு அமைச்சர்களுக்கும் துணையாக இருக்கக்கூடிய அரசுத்துறை செயலர்கள், கலெக்டர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் மற்றும் அலுவலர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.இங்கு பெரியார், அண்ணா, கலைஞர் கலைஞர் சிலைகளை திறந்து வைத்துவிட்டு தான் இந்த மேடைக்கு வந்திருக்கிறேன்.

திருச்சிக்கும் இதற்கும் நிறைய தொடர்பு உள்ளது. தந்தை பெரியார் பிறந்தது ஈரோடு என்றாலும், அவர் மாளிகை கட்டி வாழ்ந்தது இங்குதான். கல்லக்குடி போராட்டத்தில் கைதான தலைவர் கலைஞர் திருச்சி சிறையில் தான் அடைக்கப்பட்டார். மொழிப்போராட்டத்தில் கலைனரும், பெரியாரும் இணைந்து போராடி உள்ளனர். பல்வேறு புத்தகங்கள் இந்த திருச்சி மண்ணிலிருந்து தான் வெளியானது.திருச்சிக்கு பல திட்டங்களை கொடுத்துள்ளோம்.

ஜல்லிக்கட்டு அரங்கம், 4 கோடி 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பச்சைமலை சுற்றுலா திட்டம், மிக முக்கியமான திட்டமான திருச்சி மாவட்டத்தில் தொழில் புரட்சி ஏற்படுத்திட மணப்பாறையில் 1100 ஏக்கர் பரப்பளவுல சிப்காட் என்னால தொடங்கப்பட்டுள்ளது.ரூ.1 கோடி ரூபாய் மதிப்பிலான டைடல் பார்க் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படி கடந்த 4 ஆண்டுகளில் 26 ஆயிரத்து 66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெகா திட்டங்கள் திருச்சிக்காக மட்டுமே தரப்பட்டிருக்கிறது.கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 4000 வீடுகளை கட்டித் தந்திருக்கிறோம். 54,428 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைய விழாவில் 527 கோடி மதிப்பிலான 3597 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.

அது மட்டும் அல்ல இதுவரைக்கும் நான் கலந்துக்கிட்ட விழாக்களில் மிக அதிகமாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 132 பேருக்கு 856 கோடி ரூபாய் மதிப்பில நலத்திட்டத்தை வழங்கிருக்கிறேன். இந்த 4 ஆண்டுகள் செய்த திட்டங்களை பத்திரிகையாளர்களிடம் கூறியபோது அதை வியந்து கேட்டார்கள். இதைதான் எதிர்க்கட்சிகளால் பொற்த்துக்கொள்ள முடியவில்லை. எனது அடுத்த டார்கெட் செட் பண்ணிக்கிட்டு முன்னோக்கி போறதால எல்லாத்தையும் ஞாபகப்படுத்த முடியவில்லை.

ஒரு சாம்பிளுக்கு முக்கிய திட்டங்களை கூறுகிறேன். மதுரையில் ஒத்த செங்கலோடு இருக்கிற எய்ம்ஸ் மாதிரி இல்லாம, சொன்ன தேதிக்கு முன்னாடியே சென்னையில் கட்டி முடித்த 6 லட்சம் மக்களுள் பயனடைக்கூடிய கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு பூங்கா, கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று வருகிறது.மதுரைக்கு கலைஞர் நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகம், குமரிமனையில் வள்ளுவருக்கு கண்ணாடி பாலம், தொழில் பூங்காக்கள், டைடல் பார்க்குகள், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பெருமித அடையாளங்களை உருவாக்கி வருகிறோம்.

திராவிட மாடல் அரசு அமைந்தற்கான வெற்றி பயணம் தொடங்கியது திருச்சியில் இருந்து தான்.2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு திருச்சியில் நடந்த விடியலுக்கான முழக்க மாநாட்டில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான என்னுடைய கொள்கை அறிவித்தேன். தமிழ்நாட்டை துறைவாரியாக எப்படி உயர்த்தும் என்று சொல்லி 7 வாக்குறுதிகளை அப்போது நான் சொன்னேன். முதல் வாக்குறுதி வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு, இரண்டாவது வாக்குறுதி மகசூல் பெருகிடும் விவசாயம், மூன்றாவது வாக்குறுதி குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர், நான்காவது வாக்குறுதி அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம் உயர்ந்த வாழ்க்கை தரம் உள்ளிட்ட இந்த ஏழு வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம்.

பொருளாதார வளர்ச்சி 6.9 விழுக்காடு என்பது, இதுவரை தமிழ்நாடு பார்க்காத வளர்ச்சி. இந்தியாவில் நாம் தான் நம்பர் ஒன்.பாசன பரப்பளவையும், விளைச்சலையும் அதிகமாக்கி சாதனைகளை படைத்து இருக்கிறோம். நான் முதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் காரணமாக சராசரியைவிட 2 மடங்கு உயர்கல்வியில் வளர்ச்சியை பார்க்கிறோம்.இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் 5 சத்வீதம் திருச்சியில் உள்ளது.

இது எல்லாவற்றுக்கும் மேலாக சமூக நீதி அரசை உருவாக்கி இருக்கிறோம். எந்த பிரிவினரும் விட்டுப் போக கூடாது என கவனமாக செயல்பட்டு பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் எல்லாருக்குமான திராவிட மாடல் ஆட்சி நடகிறது. நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு, இன்னும் இதைவிட பெரிய சாதனைகளை படைப்போம் என உறுதியாக சொல்றேன்.

சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறேன். இதைத்தான் எதிர்க்கட்சிகளால் தாங்கிகொள்ள முடியவில்லை.இப்போதைய எதிர்க்கட்சி தலைவர் முதலமைச்சராக இருந்தபோது 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தபோது எதையும் கண்டுகொள்லாமல் இருந்தார்.காவேரி பிரச்சனையில் உரிமையை பெறவும் உச்ச நீதிமன்ற உறுதியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை. அதனால விவசாயிகள் தற்கொலை செய்த துயரம் எல்லாம் நடந்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்த ஒரே காரணத்தினால் அது நிறைவேறியது.

அதனால் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது. ஜி.எஸ்.டியினால் நம்ம அரசினுடைய உயிர் மூச்சான வரி விதிப்பு உரிமை போச்சு. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அந்த அ.தி.மு.க.வின் இருண்ட ஆட்சியிலிருந்து மீட்டு தி.மு.க. விடியல் ஆட்சி நடத்தி வருகிறது. எப்படிப்பட்ட மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம் என்பதை ஒப்பிட்டு பார்க்கவேண்டும். திராவிட மாடலினுடைய விஷன் 2.0 இனிதான் லோடிங்.

நான்கு ஆண்டு ஆட்சியில் நம்பர் ஒன் மாநிலமாக்கி சாதனை படைத்தோம். இனி நாம போற பாதை சிங்க பாதையாக இருக்கும். அது ராக்கெட் வேகத்தில் இருக்கும். அதை அடுத்து வரும் ஆண்டுகளில் பார்ப்பீர்கள்" எனத் தெரிவித்தார்.இது தற்போது இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

path we take from now on will path lion Chief Minister MK Stalin Trichy ceremony


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->