வசமாக சிக்கிய பாகிஸ்தான்! இந்தியா பாணியில் சுத்துப்போட்ட ஆப்கானிஸ்தான்!
Afghanistan Pakistan Taliban checkpoint
ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவு மீண்டும் பதற்றமடைந்துள்ளது. சமீபத்தில் இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் நடந்த மோதலில் பலர் உயிரிழந்த நிலையில், கத்தாரின் தலையீட்டில் தற்காலிக அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
ஆனால் இதைத் தொடர்ந்து தாலிபான் புதிய நடவடிக்கையாக பாகிஸ்தானுக்குள் பாயும் குனார் ஆற்றில் ஒரு பெரிய அணையை அமைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆற்றின் நீர் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தாலிபான் உச்ச தலைவர் மௌல்வி ஹிபதுல்லா அகுண்ட்சாடா, நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகத்துக்கு அணை கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டதாக அந்த அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்து குஷ் மலைப்பகுதியில் தோன்றி 480 கிலோமீட்டர் நீளத்தில் பாயும் குனார் நதி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நுழைந்து காபூல் நதியில் கலக்கிறது. பாகிஸ்தானில் இதனை சித்ரல் நதி என அழைக்கின்றனர். காபூல் நதி பின்னர் சிந்து நதியுடன் இணைகிறது.
இந்த ஆற்றில் அணை கட்டப்பட்டால் பாகிஸ்தானின் நீர்ப்பாசனம், குடிநீர், மற்றும் மின்சார உற்பத்தி தேவைகளில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் நீர் நெருக்கடி உருவாகும் அபாயம் அதிகம்.
முன்னதாக இந்தியாவுடன் நடந்த சிந்து நதி ஒப்பந்தம் போன்றே, தற்போது ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானின் நீர் ஆதாரங்களை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.
English Summary
Afghanistan Pakistan Taliban checkpoint