ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: 500 பேர் பலி! 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
Afghanistan Earthquake
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு 11.57 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நிலநடுக்க ஆய்வு மையத்தின் தகவலின்படி, ரிக்டர் அளவையில் 6.3 புள்ளிகள் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலநடுக்கம் ஜலாலாபாத்தின் கிழக்கு-வடகிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில், 8 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
முதல் அதிர்வுக்கு சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு, மீண்டும் 4.5 ரிக்டர் அளவில் மற்றொரு நில அதிர்வு ஏற்பட்டது. இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகி, மக்கள் மத்தியில் மேலும் பீதியை ஏற்படுத்தியது.
நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 500 பேர் உயிரிழந்தனர் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்பு பணியாளர்களால் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது.
இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு படையினருடன் உள்ளூர் மக்கள் இணைந்து உதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலநடுக்க அதிர்வு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாகவும் அங்குள்ள மக்கள் இரவிலேயே வெளிச்சாலைகளுக்கு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக ஊடகங்களில், மக்கள் வீடுகளை விட்டு பீதி கொண்டு ஓடும் காட்சிகளும், கட்டிடங்கள் இடிந்து விழும் காட்சிகளும் வைரலாக பரவி வருகின்றன.