மரணப் படுகுழியாக மாறிய கோல்டன் சுரங்கம்!- 200-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு; இன்னும் பல நூறு பேர் மாயமானதாகப் பகீர் தகவல்...!
Golden mine turned death trap Over 200 bodies recovered shocking information that several hundred more still missing
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள 'ருபாயா' சுரங்கப்பகுதியில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவு, உலகையே உலுக்கும் ஒரு பெரும் சோகமாக மாறியுள்ளது.
கடந்த புதன்கிழமை (ஜனவரி 28) பெய்த கனமழையினால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிக்கி, சுரங்கத் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள இப்பகுதியில் மீட்புப் பணிகள் சவாலாக உள்ள நிலையில், இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல உடல்கள் இன்னும் மண்ணுக்குள்ளேயே புதைந்து கிடப்பதாக அஞ்சப்படுகிறது.இந்த விபத்து நிகழ்ந்த ருபாயா பகுதி, வெறும் சுரங்கம் மட்டுமல்ல; உலகளாவிய தொழில்நுட்பச் சந்தையின் இதயம் போன்றது.
செல்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் டான்டலம் (Tantalum) உலோகத்தைப் பிரித்தெடுக்கத் தேவையான கோல்டன் (Coltan) தாதுவின் உலக உற்பத்தியில் 15 சதவீதத்தை இந்த ஒரே இடமே பூர்த்தி செய்கிறது.
2024 முதல் 'M23' எனும் கிளர்ச்சிக் குழுவின் ஆதிக்கத்தில் உள்ள இந்தச் சுரங்கங்களில், மக்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்காக எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, வெறும் கைகளால் தாதுக்களை வெட்டி எடுக்கும் அவலம் நீடிக்கிறது.
மழைக்காலக் ஈரப்பதத்தால் மண்ணின் உறுதித்தன்மை குலைந்து போனதே இந்த உயிர்ப்பலிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. தற்போது சுரங்கப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், அபாயகரமான இப்பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில் இருக்கும் ரத்தக்கறையை இந்தச் சம்பவம் மீண்டும் உலகிற்குப் பறைசாற்றியுள்ளது.
English Summary
Golden mine turned death trap Over 200 bodies recovered shocking information that several hundred more still missing