தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!
chennai imd rain alert
தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 13 காலை 5.30 மணியளவில், மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரம் – தெற்கு ஓரிசா கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு ஆந்திரம் – தெற்கு ஓரிசா பகுதிகளை கடக்கலாம். மேலும், தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
இன்று வடதமிழகத்தின் சில இடங்களிலும், தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். ஒருசில இடங்களில் மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். திருவள்ளூர், ராணிபேட்டை, நீலகிரி, மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆகஸ்ட் 14 முதல் 19 வரை தமிழகத்தின் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 29°C, குறைந்தபட்சம் 26-27°C இருக்கும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில், இடையிடையே 60 கிமீ வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.