புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் 3வது இடம்! உலக தற்கொலை தடுப்பு தின அதிர்ச்சி செய்தி!
World Suicide day
ஆண்டு தோறும் செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரி சுகாதாரத்துறையின் தேசிய தொலைத் தொடர்பு மனநல திட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 2017 முதல் 2022 வரை தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவுகள் தெரிவிக்கின்றன. அதில் புதுச்சேரி 26.3 சதவீதத்துடன் 3வது இடத்தில் இருப்பது கவலைக்குரியதாகும்.
தற்கொலைக்கு முக்கிய காரணங்கள் போதைப்பொருள் பழக்கம், மன அழுத்தம், காதல் தோல்வி, குடும்ப பிரச்சனைகள் போன்றவை. ஒருவர் தற்கொலை செய்வது அவரின் வாழ்க்கையை மட்டுமல்லாது குடும்பத்தையும், சமூகத்தையும் தீவிரமாக பாதிக்கிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரிடமிருந்தும் துவங்குகிறது. யாராவது தங்கள் மனஅழுத்தத்தையும் விரக்தியையும் பகிரும்போது, அதனை கவனமாகக் கேட்டு, அவர்களுக்கு சரியான ஆலோசனையும் மருத்துவ உதவியும் வழங்குவதே முதல் படியாகும். நேர்மறையான உறவுகள் மற்றும் ஆதரவு வலையமைப்பு ஒருவரை உயிரிழப்பிலிருந்து காக்க முடியும்.
மனச்சோர்வு, பயம், நம்பிக்கையின்மை அல்லது தற்கொலை சிந்தனைகள் ஏற்படும் எவரும் உடனடியாக உதவியை நாட வேண்டும். இதற்காக 24 மணி நேர இலவச மனநல ஆலோசனை எண்கள் 14416 அல்லது 1800-891-4416 வழியாக தொடர்பு கொள்ளலாம். இந்த எண்களில் தகுந்த ஆலோசனையும் மருத்துவ உதவியும் கிடைக்கும்.
தற்கொலை தடுப்பு என்பது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு. ஒவ்வொருவரும் அக்கறையுடன் ஒருவருக்கொருவர் கவனித்தால், பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.