அதை எடப்பாடி பழனிசாமியிடம் கேளுங்கள்... என்னிடம் கேட்காதீர்கள்... காட்டமாக பதிலளித்த ஓபிஎஸ்!
ADMK EPS vs Sengottaiyan OPS
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டுள்ள கட்சி ஒன்றிணைப்பு முயற்சி வெற்றி பெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக உள்ளது. அது எப்படியான வடிவில் நடந்தாலும் முழு மனதுடன் வரவேற்கிறேன், அதற்கும் ஒத்துழைப்பு தருகிறேன். ஒன்றிணைந்தால்தான் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கனவுகள் நிறைவேறும்” என்றார்.
இபிஎஸ் உடனான பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பியபோது, “அதை அவரிடம் கேளுங்கள். என்னிடம் கேட்காதீர்கள். என்னைப் பொறுத்தவரை கட்சி இணைப்பில் எந்த நிபந்தனையும் இல்லை” என்று கூறினார்.
கூட்டணி அரசியல் குறித்த கேள்விக்கு, “அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை. எதிர்காலத்தில் எந்த சூழலும் உருவாகலாம்” என பதிலளித்தார்.
அதிமுக ஒன்றிணைந்தால் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “பல பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. ஆறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவை எங்கள் தர்மயுத்தத்தின் அடிப்படை. அவை நிறைவேறிய பிறகே எதிர்கால முடிவுகள் பற்றி யோசிக்கலாம்” என்று தெரிவித்தார்.
மேலும், “செங்கோட்டையனின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். எனக்கு தில்லியில் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை” என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
English Summary
ADMK EPS vs Sengottaiyan OPS