ஏ.ஐ வீடியோக்கள் எதிர்காலத்தில் ஆபத்தான அளவுக்கு போகும்! நிவேதா பெத்துராஜ் எச்சரிக்கை!
AI videos will become dangerous in the future Nivetha Pethuraj warns
நடிகை நிவேதா பெத்துராஜ் சினிமாவிலும், கார் ரேசிங்கிலும் தன் திறமையை நிரூபித்து வருகிறார். தமிழில் மட்டுமல்லாமல், தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்துவரும் அவர், சமூக பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை சமூக வலைதளங்களில் அடிக்கடி பகிர்ந்து வருவது வழக்கம்.
இப்போது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் அதன் தவறான பயன்பாட்டை பற்றி அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவு செய்திருப்பது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஏ.ஐ தொழில்நுட்பம் அறிவியலில் பெரும் புரட்சியாக மாறியுள்ள நிலையில், சிலர் அதை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தி முன்னேற்றம் அடைகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் சிலர் இதையே தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்கள், மார்ஃபிங் புகைப்படங்கள், மற்றும் கற்பனை அடிப்படையிலான காட்சிகளை உருவாக்கி பரப்பி வருகின்றனர்.
இதுபோன்ற அபாயத்தை சுட்டிக்காட்டிய நிவேதா பெத்துராஜ் தனது பதிவில்,“அபத்தமான ஏ.ஐ வீடியோக்களை உண்மையானவையாகக் காட்டும் இந்தப் போக்கு மிகவும் மோசமானது. சமீபத்தில் உருவாகும் ஏ.ஐ வீடியோக்கள் உண்மையிலிருந்து வேறுபடுத்த முடியாத அளவுக்கு வந்துவிட்டன. இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் எவ்வளவு ஆபத்தாக மாறும் என்று சிந்தித்தாலே பயமாக இருக்கிறது,”
என்று தெரிவித்துள்ளார்.அவரது இந்த பதிவு ரசிகர்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் அவரை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு இணையவாசி தனது கருத்தில்,“நீங்கள் மிக முக்கியமான விஷயத்தை சொன்னீர்கள். ஏ.ஐ ஒரு சக்திவாய்ந்த கருவி, ஆனால் அதன் தவறான பயன்பாடு சமுதாயத்திற்கு பெரும் ஆபத்தாக மாறும். போலி வீடியோக்கள், ஆடியோ கிளிப்புகள் — இவை எல்லாம் நம்ப முடியாத அளவுக்கு உண்மையாக தோன்றுகின்றன,”
என்று பதிவு செய்துள்ளார்.
நிவேதா பெத்துராஜின் இந்த பதிவு, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் இரு முனைகளையும் நினைவூட்டும் வகையில் ரசிகர்கள் மத்தியில் தீவிரமான விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது. “அறிவியல் முன்னேற்றம் நல்லதுதான்... ஆனால் அதைப் பயன்படுத்தும் மனித மனம் தான் அதின் திசையை தீர்மானிக்கிறது” — என்ற நிவேதாவின் வார்த்தைகள், இணையவாசிகளிடையே சிந்தனைக்குத் தூண்டும் கருத்தாக மாறியுள்ளன.
English Summary
AI videos will become dangerous in the future Nivetha Pethuraj warns