ஜிஎஸ்டி வரியால் பெற்றோர்கள் அதிர்ச்சி! அதிரடியாக உயர்ந்த நீட் தேர்வு பயிற்சி மைய கட்டணம்!
GST NEET Coaching Center
56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை நடைமுறையில் இருந்த 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு வரி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் மாற்றாக, இனி 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரி முறை மட்டும் அமலில் இருக்கும்.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படும். அதேசமயம், சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்கள் போன்றவற்றுக்கு தனிப்பட்ட முறையில் 40% வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையில், பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களுக்கு முழுமையான ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், போட்டித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டியுள்ளது.
இந்த முடிவைப் பற்றி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பயிற்சி மையங்களை கல்வி நிறுவனங்களாக கருத முடியாது. எனவே 18% ஜிஎஸ்டி பொருந்தும்” என்று விளக்கமளித்தார். அதாவது, JEE அல்லது NEET போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி கட்டணம் ரூ.50,000 என்றால், வரியுடன் ரூ.59,000 ஆக உயரும்.
இவ்வரி ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் தனியார் ஆசிரியர்கள் மற்றும் கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதன் விளைவாக பயிற்சி மையங்களின் கட்டணங்கள் அதிகரிக்கும் நிலையில், பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுமா என்ற கவலை எழுந்துள்ளது.